சமாதானம் நிலவட்டும்!
""சமாதானம் செய்வோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்களே கடவுளின் மக்கள்'' என்பது இறைவாக்கு. நீதிகளில் இருந்து நம்மை மீட்க, மண்ணகத்திற்கு மனிதனைத் தேடி வந்த தெய்வம் "" சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிற


""சமாதானம் செய்வோர் பேறு பெற்றோர்;
ஏனெனில் அவர்களே கடவுளின் மக்கள்'' என்பது இறைவாக்கு.
நீதிகளில் இருந்து நம்மை மீட்க, மண்ணகத்திற்கு மனிதனைத் தேடி வந்த தெய்வம் "" சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்'' என்று சமாதானத்தையே நமக்குச் சன்மானமாக அளித்துச் சென்றார். நாம் நம்முடைய உள்ளங்களைச் சற்று ஊடுருவிப் பார்ப்போம். இன்று உலக மக்களிடையே மிகவும் அவசியமாகத் தேவைப்படுவது அன்பு. சமாதானமே இந்த அன்பின் உறைவிடம். சமாதானம் இறைவனின் சந்நிதானமாகும். இந்த அன்பும் சமாதானமும் நம் உள்ளங்களில், இல்லங்களில் இன்று இடம்பெற்றுள்ளதா? சற்றே சிந்திப்போம்.
தினமும் நாம் கேட்கும் மறையுரைகள் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளதா? உள்ளத்தில் வன்மமும், பகையும், குரோதமும் நிறைந்திருக்க உதடுகளால் நாம் சொல்லும் சமாதானம் அர்த்தமுள்ளதாகுமா? சமய வழிபாடுகள் மிகவும் அர்த்தமுடையவை. அவை நம்மை நிறை வாழ்வுக்கு இட்டுச் செல்பவை. முழு மனதோடு நம்முடைய வழிபாடுகளில் பங்குகொண்டால் மட்டுமே அது உண்மையான பயனைத் தரும். ஒவ்வொரு மனிதனும் தத்தம் சமய நெறிகள் காட்டும் பாதையைத் தங்கள் வாழ்க்கையாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது சமாதானம் அங்கே தங்கும். மண்ணகம் விண்ணகமாக ஒளிவீசும்.
ஆன்மீகத்தின் உயிர்நாடி சமாதானம். ""ஒரு நாட்டின் உயிர் நாடி ஆன்மிகத்தில் மறைந்துகிடக்கிறது'' என்கிறார் விவேகானந்தர். ""ஆன்மா ஆண்டவரின் சங்கீதம்'' என்கிறார் மகாத்மா. கடவுள் மற்றும் சமயப்பற்றும், ஆன்மிகமும் மனிதர்களுக்கு உணவாக, உரமாக ஊட்டப்பட வேண்டும். ""ஆன்மிகம் அமைதிக்கு இட்டுச் செல்லும் நந்தாவிளக்கு'' என்றார் கோகலே. இளமை முதலே நம் குழந்தைகளுக்கு ஆன்மிக வாழ்வைப் பயிற்றுவிக்க வேண்டியது நமது கடமை. ஆடம்பர விழாக்கள் நம் ஆன்மிகத்தை வளர்க்கின்றதா? குழந்தைகளுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கிக் கொடுப்பதோடு விழாக்கள் முடிந்துவிடக் கூடாது. அவர்களுடைய உள்ளத்தில் ஆன்மிக வாழ்வே முதன்மையானது என்ற எண்ணம் ஆழமாகப் பதிய வேண்டும். குடும்பத்தில் அன்பும், சமாதானமும் நிலவ ஆன்மிக வாழ்வே உறுதுணையாகும்.
நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் சமாதானம் நிலவட்டும். பாசம் பொங்கட்டும். பகை சாம்பலாகட்டும். நம் உள்ளங்கள் செந்நீரைச் சிந்தாமல், பன்னீரில் மிதக்கட்டும். வன்முறை என்ற சாக்கடையைச் சமாதான நீரால் சுத்தம் செய்வோம். உடைந்த உள்ளங்களை அன்பால் கட்டுவோம். புது வாழ்வு நம்மில் மலரச் செய்வோம். சமாதானத்தை நிலைநாட்டுவோம். இறை அரசரின் மக்களாக வாழ்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...