இயேசு ஒரு பணியாளர்!
இயேசு கிறிஸ்து மனித உருக்கொண்டு இந்த மண்ணிலே மக்களோடு தோழமை கொண்டதன் நோக்கமே மக்களுக்குத் தொண்டு செய்யத்தான்


இயேசு கிறிஸ்து மனித உருக்கொண்டு இந்த மண்ணிலே மக்களோடு தோழமை கொண்டதன் நோக்கமே மக்களுக்குத் தொண்டு செய்யத்தான்; நிறைவாழ்வு கொடுக்கத்தான். தன்னை ஒரு இறைமகனாக வெளிப்படுத்திக்கொள்வதில் அவருக்கு நாட்டமில்லை. மாறாக தனது வாழ்வின் இலக்கு ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பதும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடுதலும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புதலும்... (லூக்4:18-19) மட்டுமே என்ற தெளிவோடுதான் தனது பணிவாழ்வைத் துவங்கினார். அதற்காகத் தன் உயிரையும் ஈந்தார்.
இயேசு செய்த பணிகள்:
< பாவிகளோடும், வரி வசூலிப்போரோடும் நட்புடன் பழகினார்.
<சாதாரண மக்களோடு அன்போடு உரையாடி, அவர்களோடு அடிக்கடி உணவருந்தினார்.
<எல்லாவிதமான நோய்களிலிருந்தும் மக்களைக் குணமாக்கினார்.
<பேய்பிடித்தோராகக் கருதப்பட்ட பலரை நலமாக்கினார்.
<குணமாக்கும் செயல் வழியாக நோயுற்றோரின் வேதனையையும், இயலாமையையும் போக்கி அவர்களுக்கு சுயமதிப்பு கொடுத்தார்.
< பாவங்களை மன்னித்து, அவர்களை இறைவனோடும் சமூகத்தோடும் ஒப்புரவாக்கினார்.
இயேசு விரும்பிய சீடர்கள் - பணியாளர்கள்:
தான் இறைமகன், அனைவரும் தனக்கு கீழுள்ளவர்கள் என்ற ஆணவத்தோடோ அல்லது அதிகாரத்தோடோ மக்களை இயேசு அணுகவில்லை. கடவுள் தன்மையில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் (பிலி2:6-7). தனது பணி, யாருக்கு என்ற தெளிவும் கொண்டிருந்தார். மேலும், தான் இறைவனின் ஊழியராக இருந்து செய்த பணிகளைத் தனது சீடர்களும் செயல்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள்' (யோவான் 13:14) என்று கூறி, தன் சீடர்களின் பாதங்களைக் கழுவியதன் வழியாக பணியாளர் என்பவர் யார் என்ற முன்மாதிரியைக் காண்பித்தார். பணி செய்வது - அது எப்படிப்பட்ட பணியாக இருப்பினும் - தாழ்வான ஒரு செயலல்ல. அது அன்புச் செயல், பிறர்பால் கொண்ட அக்கறையின் அடிப்படையில் எழும் செயல். குறிப்பாக பணி செய்வோர்தான் எனது உண்மையான சீடர்கள் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
பணியாளராக இருக்கவே அழைப்பு:
இயேசு கிறிஸ்து தனது உயிர்ப்பிற்குப் பிறகு பேதுருவிடம் மூன்று முறை என்னை அன்பு செய்கிறாயா என்று கேள்வி கேட்டு அதற்கு அவர் கொடுக்கும் பதில்கள்:
1. என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர் (யோ21:15)
2. என் ஆடுகளை மேய் (யோ21:16)
3. என் ஆடுகளைப் பேணி வளர் (யோ21:17).
இந்நிகழ்வு வழியாக ஒவ்வொருத் திருப்பணியாளரையும் இயேசு கிறிஸ்து ஒரு பணியாளராக, மேய்ப்பராகத்தான் பணியாற்ற அழைப்பு விடுக்கின்றார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பணியாளர் என்ற நிலையிலிருந்து பணியாற்றும்பொழுது இதயத்தில் கனிவு, நேர்மை, நிலையான மற்றும் உறுதியான மனம், நீதியின்மேல் தொடர்ந்த அக்கறை, மனித நேயம் போன்றவை இக்குறிக்கோளை அடைவதற்குப் பெரிதும் உதவிபுரியும்.
இயேசுவின் பணிக்காலத்தில் அவரைக் குறித்து பெருந்தீணிக்காரன், ஆயக்காரர் மற்றும் பாவிகளின் நண்பன் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாமும் கடைநிலையினருக்குப் பணிபுரியும்பொழுது பலவிதமான பேச்சுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாக நேரிடும். அதைக்குறித்து மனம் வருந்தத் தேவையில்லை. மனிதம் நிறைவடைய வேண்டும் என்ற முனைப்போடு மட்டும் பணியாற்றுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...