புனித அந்தோணியாரின் இறையனுபவம்!
சென்னையின் பாரிமுனையில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் கொலுவீற்றிருக்கும் புனித அந்தோணியாரைத் தரிசிக்க செவ்வாய்க்கிழமை தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்திருப்பீர்கள்.


சென்னையின் பாரிமுனையில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் கொலுவீற்றிருக்கும் புனித அந்தோணியாரைத் தரிசிக்க செவ்வாய்க்கிழமை தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்திருப்பீர்கள். இதே போல, சென்னை பாலவாக்கத்திலுள்ள அந்தோணியார் ஆலயத்திலும் ஜாதி, மத, மொழி வித்தியாசமில்லாமல் அனைத்து மக்களும் கூடுவது வழக்கம்.
உடல்நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் இந்தப் புனிதரை நாடி வருகின்றனர். இவர் தங்களுடைய மன்றாட்டைக் கேட்டு, இறை இயேசுவிடம் தங்களுக்காக மன்றாடி, வேண்டிய வரத்தைப் பெற்றுத் தருவார் என்கிற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். புனித அந்தோணியாரும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய வரத்தைத் தவறாமல் கிடைக்கச் செய்கின்றார்.
முக்கியமாக குழந்தைப் பேறற்றோர், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரின் பாதுகாவலராக இவர் விளங்குகிறார். அதோடு உடலில் குறைபாடுகள் உள்ள மக்கள் (உ.ம்.) பேச இயலாத, கேட்க இயலாத, நடக்க இயலாத பல கோடி மக்களுக்கு அந்தோணியார் ஆறுதல் அளித்து நற்சுகம் வழங்குகின்றார். இதன் காரணமாகத்தான் மக்கள் அவருடைய திருத்தலங்களிலே கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தியவண்ணம் ஆலயத்தைச் சுற்றி வந்து வழிபடுகின்றனர்.
இவர் போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே இறை பக்தியிலும் ஞானத்திலும் வளர்ந்து வந்தார். இளைஞனான பிறகு குருமடத்தில் சேர்ந்து துறவியானார். குருமடத்திலிருந்த அருட்தந்தையரும் சகோதர குருக்களும் இவருடைய பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தனர்.
எல்லா ஆலயங்களிலும் புனித அந்தோணியார், குழந்தை இயேசுவைத் தனது கைகளில் வைத்துக்கொண்டு நிற்பதைப் போன்ற திருச்சிலைகள் வைத்திருப்பதைக் காணலாம்.
இதற்குக் காரணம் - ஒருமுறை, இவர் தனது அறையில் செபம் செய்துகொண்டிருந்தபோது, அறை முழுக்க ஒளி வெள்ளம் சூழ்ந்தது. அப்போது அங்கிருந்த மேஜையில் இயேசுகிறிஸ்து குழந்தை வடிவில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். இதைக் கண்ட அந்தோணியார் மிகவும் மகிழ்ந்து, குழந்தை இயேசுவை எடுத்துத் தனது கைகளில் அணைத்து வைத்துக் கொண்டார்.
இந்த அனுபவத்தின் மூலம் இயேசுவிடமிருந்து மிகப் பெரிய சக்தியைப் பெற்றுத் தனது வாழ்வையே முழுமையாக அவருக்கு அர்ப்பணித்து வாழ்ந்தார் இந்தப் புனிதர்.
ஒருமுறை, அசுத்த ஆவியினால் (பேய்) பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை இந்தப் புனிதரிடம் கொண்டு வந்தனர். இவர் இயேசுவிடம் ஜெபித்து, தமது கையால் ஒரு சீட்டு எழுதிக் கொடுத்து, அந்தப் பெண்ணின் கழுத்தில் அணிந்துகொள்ளும்படி செய்தார். அந்தப் பெண் அந்தச் சீட்டை அணிந்த நாளில் இருந்து பேய்த்தொல்லையிலிருந்து விடுபட்டு நற்சுகம் பெற்றார். அந்தச் சீட்டு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இப்படி இந்தப் புனிதரின் வேண்டுதலால் குணம் பெற்ற கதைகள் ஏராளமாக உள்ளன. இத்தாலியிலுள்ள பதுவா என்ற நகரில் இவர் தனது இறுதிக் காலத்தைக் கழித்து இறைவனடி சேர்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...