பக்திப் போட்டியில் யானை- சிலந்தி!
திருவானைக்கா' திருப்புகழ் பாடலான ""உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே'' என்று தொடங்கும் பாடலில்


திருவானைக்கா' திருப்புகழ் பாடலான ""உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே'' என்று தொடங்கும் பாடலில் "சிவத்தியானமுற்றோர் சிலந்தி நூல் செய் திருக்காவணத்தேயி ருப்பார்'' என்ற அடிகளில் சிவபெருமானை யானையும் சிலந்தியும் பூசித்த வரலாற்றைக் கூறுகிறார் அருணகிரிநாதர்.
புஷ்பவந்தன், மாலியவான் என்று சிவகணங்களில் இருவர். சிவமூர்த்தியின்பால் அளவற்ற பக்தி பூண்ட இந்த இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சிவனுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார்கள். சிவனுக்குத் தொண்டு செய்வதில் முதலில் இருவருக்கும் இருந்த ஆரோக்கியமான போட்டி நாளடைவில் பொறாமையில் முடிந்தது. ஒருவரையொருவர் விஞ்ச வேண்டும் என்ற வெறியில் ஒருநாள் இருவருக்கும் சண்டை வந்து விட்டது! சண்டை முற்றி ஒருவரையொருவர் திட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். அதிலும் இருவரது ஆத்திரமும் அடங்காததால் ஒருவர் மீது ஒருவர் சாபம் கொடுத்துக் கொண்டனர். புஷ்பவந்தன் மாலியவானைச் சிலந்தியாகுமாறு சபித்தான். மாலியவான் புஷ்பவந்தனை யானையாய்ப் பிறக்கும்படி சபித்து விட்டான். இருவர் சாபமும் பலித்து விட்டது! அதன்படி புஷ்பவந்தன் யானையாகப் பிறந்தான். மாலியவான் சிலந்தியாய் பிறந்தான். இப்படிப் பிறந்த பிறப்பிலும் அவர்களது போட்டி தொடர்ந்தது! எப்படி?
காவிரியின் வடகரையில் ஒரு வெண்நாவல் மரத்தடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை யானையாகப் பிறந்த புஷ்பவந்தன் மிகுந்த அன்புடன் வழிபட்டு வந்தான். அதாவது அந்த யானை தினந்தோறும் காவிரியில் நீராடி துதிக்கையில் நீர் மொண்டு வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும். துதிக்கையால் அருகிலிருக்கும் நந்தவனத்தில் புஷ்பங்களைப் பறித்து வந்து சிவலிங்கத்திற்குச் சாத்தும்.
அதே மரத்திலிருந்த சிலந்தியும் சிவலிங்கத்தைக் கண்டது. கண்டதும் அதற்கு பக்திப் பரவசம் மேலிட்டது. மரத்திலிருந்து சருகுகள் சிவலிங்கத்தின்மீது உதிர்வதைக் கண்ட சிலந்தி அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தன் வாய் நூலால் சிவலிங்கத்தின் மேற்புறமாக ஒரு பந்தல் போட்டது! இனி, சருகுகள் பந்தலின் மீதுதான் விழும்; சிவலிங்கத்தின் மீது விழாதே! அத்துடன் தன் வாய் நூலால் கோயில் போலவும் கோபுரம் போலவும் அமைத்துச் சிவதியானம் செய்தது.
மறுநாள் யானை பார்த்தபோது சிலந்தி தன் வாய் எச்சில் நூலால் சிவலிங்கத்தைப் பாழ் செய்து விட்டதை அறிந்து துடித்தது. "அது எவ்வளவு மடி ஆச்சாரமாய்க் குளித்துவிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறது? இந்தச் சிலந்தி அதை இப்படிப் பாழ் செய்து விட்டதே...' உடனே ஆத்திரத்துடன் தன் துதிக்கையால் அந்த நூல் பந்தலை அழித்து விட்டுச் சென்று விட்டது. மறுநாள் சிலந்தி பார்த்தபோது அது அமைத்த நூல் பந்தலைக் காணோம். உடனே நிமிடத்தில் மீண்டும் லிங்கத்திற்கு மேற்புறத்தில் தன் வாய் நூலால் பந்தலிட்டு விட்டது! மறுநாள் யானை வந்து மீண்டும் பந்தலை அழித்துவிட்டுப் போனது! இப்படி யானை அழிப்பதும், சிலந்தி மீண்டும் பந்தலை அமைப்பதும் கொஞ்சகாலம் தொடர்ந்தது. ஒருநாள் சிலந்தி, அழித்த பந்தலை மீண்டும் அமைத்து விட்டு ஓர் ஓரமாய் ஒளிந்து கொண்டது. தான் அமைக்கும் நூல் பந்தலை இப்படி அழித்து அட்டூழியம் செய்யும் யானைக்குத் தகுந்த பாடம் கற்பித்தால்தான் அதன் ஆத்திரம் அடங்கும்! யானை வந்தது. நூல் பந்தலை அழிக்க ஆரம்பித்தது. உடனே சிலந்தி விருட்டென்று பாய்ந்து யானையின் தும்பிக்கையின் வழியே உட்புகுந்து குடை குடை என்று குடைய ஆரம்பித்து விட்டது. சிலந்தியின் கடி தாங்காமல் யானை நிலத்தில் விழுந்து புரண்டு உயிரை விட்டது. யானையின் தாக்குதலால் சிலந்தியும் மாண்டது!
இறந்த யானை சிவகணம் ஆயிற்று. மாண்ட சிலந்தி தான் செய்த சிவதியானத்தால் சோழர் குலத்தில் பிறந்தது. காலம் கடந்து பிறந்ததால் கண் சிவந்து பிறந்தது. அதனால் கோச்செஞ்கண்ணன் என்று பெயர் பெற்றது.
கோச்செங்கட்சோழன் தன் வாழ்நாளில் சிவபெருமானுக்குப் பல கோயில்கள் கட்டினான். முற்பிறப்பின் வாசனை காரணமாக இந்தப் பிறவியிலும், தான் கட்டும் கோயில்களில் யானை புகுந்து அழித்து விடுமோ என்ற அச்சத்தில் யானைகள் புகாத வண்ணமாய் அவன் கட்டிய கோயில்கள் அனைத்துமே மாடக்கோயில்கள்தான்! (மாடக்கோயில் வாயில்கள் மிகக் குறுகியவை.
யானையால் உள்ளே புக முடியாது!)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...