காகத்திற்குக் கண்ணளித்த வரலாறு!
"காது மொருவிழி காகமுற அருள் மாயன்' என்று வரும் அடியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்றினை அருணகிரிநாதர் சுட்டிக்காட்டுகிறார்.


திருவோரகத் திருப்புகழ் "பாதிமதி நதிபோது மணி சடை' என்ற பாடலில் "காது மொருவிழி காகமுற அருள் மாயன்' என்று வரும் அடியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்றினை அருணகிரிநாதர் சுட்டிக்காட்டுகிறார்.
ராமபிரான் சீதா, லஷ்மணர் ஆகியோருடன் காட்டிற்குச் சென்று அங்கு சித்திர கூட பர்வதத்தில் மந்தாகினி நதிக்கருகில் உள்ள சோலையில் வசித்து வந்த நேரம். அது, மகா ரம்மியமான இடம். லஷ்மணன் காய், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றைச் சேகரித்து வரச் சென்றிருந்தான். ஒரு மர நிழலில் சீதை அமர்ந்திருக்க அவள் மடியில் ராமர் சற்றுக் கண்ணயர்ந்திருந்தார். சீதை அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
காரணம் தான் சற்று அசைந்தாலும் அதனால் ராமபிரானின் தூக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சம்தான். அப்பொழுது அந்த வழியாக இந்திரனின் குமாரனான ஜயந்தன் வந்து கொண்டிருந்தான். அவனுக்குச் சீதா பிராட்டியார் மீது அளவற்ற ஆசை! அப்பன் குணத்தை அப்படியே அள்ளிக்கொண்டு அப்பனுக்குத் தப்பாமற் பிறந்த பிள்ளை அவன்! அப்பன் இந்திரன் முனிவர் பத்தினியான அகலிகை மீது கொண்ட ஆசையைப் போல இவனுக்கு சீதாபிராட்டியின்மீது மையல்! ஒரு காக உருவம் எடுத்து ஒரு மரக்கிளையில் அமர்ந்து சீதாபிராட்டியாரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
பார்க்கப்பார்க்க அவனுக்கு உள்ளத்தினுள் ஆசை பொங்கியது. எனவே பறந்து வந்து சீதா பிராட்டியின் தோள், முதுகு, மார்பு என்று கொத்தினான். சீதை காக்கையின் தொந்தரவை சகித்தவாறு ஆடாமல் அமர்ந்திருந்தாள். அவள் கவலையெல்லாம் தான் எங்கே துளி அசைந்தாலும் ராமபிரான் துயில் கலைந்து விடுமே என்பது. அதனால் சீதை ஆடாமல் இருக்கிறாள். தன்மீது அவளுக்கு விருப்பம்தான் போலும் என்று தப்புக் கணக்குப் போட்ட காக்கையாகிய ஜயந்தனுக்கு உற்சாகம் மேலிட்டு மேலும் கொத்திக் குதற ஆரம்பித்தான்.
காக்கையின் அலகால் கொத்தப்பட்ட சீதாபிராட்டியின் தோள் முதலியவற்றிலிருந்து ரத்தம் பீறிட்டுத் தெளித்து ராமர் முகத்தின்மீதும் விழுந்தது.
ராமர் தூக்கம் கலைந்து எழுந்தார். ரத்த விளாறாய் இருக்கும் சீதையையும் அவளைக் கொத்திக் குதறிய காக்கையையும் கண்ட ராமருக்கு விஷயம் சட்டென்று விளங்கி விட்டது.
தன் பத்தினியைத் துன்புறுத்திய காக்கையை உடனே துவம்சம் செய்யும் கோபத்தில் தான் படுத்திருந்த தர்ப்பைப் பாயில் இருந்து ஒரு புல்லை எடுத்து ஏதோ மந்திரத்தை ஜெபித்து இந்தக் காகத்தை ""காதும்'' (கொல்லும்) என்று ஏவினார். அவ்வளவுதான்.
அடுத்த வினாடியே புல்லாய் இருந்த அது கூரிய அம்பாய் மாறி காகத்தை நோக்கிப் பாய்ந்தது! (வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழியே இதனால்தான் ஏற்பட்டதோ!) காக்கை உருவில் இருந்த ஜயந்தனுக்கு தான் வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டது புரிந்தது. உடனே அந்த அஸ்திரத்திலிருந்து தப்பிக்கப் பல திசைகளிலும் ஓடினான். ராமரின் அஸ்திரம் அவன் சென்ற இடமெல்லாம் பாய்ந்து சென்றது. முடிவில் யமனிடம் ஓடினான் அபயம் தேடி. ஆனால் பின்னால் துரத்துவது ராமபாணம் என்று அறிந்த யமன், அவனை இந்தப் பக்கம் வராதே என்று விரட்டி அடித்தான். இந்திரன், பிரம்மா ஆகியோரிடமும் ஓடிச் சென்று முறையிட அவர்கள் தம்மால் அவனைக் காக்க முடியாது என்று கையை விரித்து விட்டனர்.
கடைசியில் சிவபிரானிடம் செல்ல, அவர் ""நீ எவருக்குக் குற்றம் செய்தாயோ அவரிடமே போய் மன்னிப்புக் கேள். ராமர் காப்பாற்றுவார்'' என்று ஜயந்தனை விரட்டி விட்டார்! உடனே காகம் பறந்து வந்து சித்திர கூடத்தில் ராமரின் கால்களில் ""ராமா... அபயம், சீதாபதயே அபயம்'' என்று விழுந்து வணங்கிக் கதறியது!
ராமர், ""சரி. என்னையே தஞ்சம் என்று வந்து விட்டாய். அப்படி வருபவரைக் காக்க வேண்டும் என்பது எங்கள் குல நெறி. ஆனால் உன் உயிரைக் காப்பாற்றுகிறேன். எனினும் நீ பிறர் மனைவியைத் தீய எண்ணத்துடன் பார்த்திருக்கிறாய். அது மகா தவறு. அதனால் அப்படிப் பார்த்த உன் கண்களில் ஒன்று எனது அம்புக்குப் பலியாகிவிடும். இன்று முதல் உன் குலத்தோருக்கு ஒரு கண்ணே இருக்கும்'' என்று காக்கைக்கு ஒரு கண்ணைப் பறித்து, இன்னொரு கண்ணை அளித்து அருள்புரிந்தார் ராமபிரான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...