திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அநாதைகளை ஆதரித்தல்

அநாதைகளை ஆதரித்தல் மறுமை நாளின் சோதனையில் சாதனையாக நின்று வென்று வேதனையின்றி சொர்க்கம் புக மிகவும் உதவும்.

News image
Updated On :12 டிசம்பர் 2014, 3:14 pm IST

அநாதைகளை ஆதரித்தல் மறுமை நாளின் சோதனையில் சாதனையாக நின்று வென்று வேதனையின்றி சொர்க்கம் புக மிகவும் உதவும்.

இஸ்லாம் தோன்றுவதற்கு முன் அரபியர்கள் அநாதைகளின் பொருளை அபகரித்து அநாதைகளுக்கு அநீதி இழைத்தார். இந் நிகழ்வை நினைவூட்டியே குர்ஆனின் 93-9 ஆவது வசனம், ""அநாதையை அடக்காதீர்'' என்றும் 107-1 முதல் 3 வரையுள்ள வசனங்கள் ""அநாதையை விரட்டுபவனும் ஏழைக்கு உணவளிக்கத் தூண்டாதவனும் மறுமை நாளை மறுப்பவன்'' என்றும் கூறுகின்றன.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் இணைத்து காட்டி அநாதையை ஆதரிப்போரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் சொர்க்கத்தில் இவ்வாறு இணைந்திருப்பார்கள் என்று இயம்பினார்கள். அறிவிப்பவர்கள் -ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), அபூ ஹீரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.

அநாதைகளை நன்முறையில் பரிபாலித்து சீர்படுத்துவது சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து இருந்தால் அநாதைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர்'' என்ற குர்ஆனின் 2-220 ஆவது வசனப்படி ஜைனப் பிந்த் ஜஹ்ஸ் (ரலி) பல அநாதை குழந்தைகளை வளர்த்தார்.

கத்பான் குடும்பத்தில் மூத்தவர் இறந்து விட்டார். அண்ணனின் மகனைத் தம்பி வளர்த்தார். பருவம் எய்திய சிறுவன் தந்தையின் சொத்தைத் தருமாறு சிற்றப்பாவிடம் வேண்டினான். சிற்றப்பா சீற்றமுடன் மறுத்தார். வழக்கு வள்ளல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தது. அப்பொழுது திருக் குர்ஆனின் 4-2 ஆவது வசனம், ""அநாதைகளுக்கு அவர்களுடைய பொருள்களைக் கொடுத்து விடுங்கள். நல்லவற்றிற்குப் பதிலாக கெட்டவற்றை மாற்றிக் கொடுக்காதீர்கள். உங்களின் பொருள்களோடு சேர்த்து அவர்களின் பொருள்களையும் சாப்பிட்டு விடாதீர்கள். நிச்சயமாக அது பெரிய பாவம்'' என்று எடுத்துரைக்க, சிற்றப்பா அண்ணனின் சொத்துக்களை அண்ணனின் மகனுக்கு மனமுவந்து கொடுத்து பெரும் பாவத்திலிருந்து மீண்டேன் என்று நிம்மதி பெற்றார்.

பெற்ற தந்தையையோ, பெற்றோர் இருவரையுமோ இழந்தவரே அநாதை. அநாதையின் சொத்துக்களைப் பராமரிப்போர் அச் சொத்துகளில் நல்லதை எடுத்துக் கொண்டு அவற்றிற்குப் பதில் பராமரிப்போரின் பாழ்பட்ட சொத்தையான சொத்துக்களை கொடுக்க கூடாது. அநாதைகளின் பணம், பொருள்களைத் தன்னுடையது போல் தரங்கெட்டு, தறிகெட்டு தாறுமாறாய் செலவு செய்து வீணாக்க கூடாது; விரயமாக்க கூடாது.

ரிபஆ என்பவர் இறந்தார். அவருக்கு ஒரு மகன். அவன் வயதில் சிறியவன். ரிபஆவின் சகோதரர், சாந்த நபி (ஸல்) அவர்களிடம், ""என் சகோதரரின் அநாதைச் சிறுவனை வளர்க்கிறேன். அண்ணனின் பொருள்களுக்கும் பொறுப்பேற்று பாதுகாக்கிறேன். அப்பொருள்களிலிருந்து எனக்கென்று எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம். அப்பொருளை எப்பொழுது ஒப்படைக்கவேண்டும்'' என்று கேட்டார். அவருக்கு விளக்கமளிக்க திருக் குர்ஆனின் 4-6 ஆவது வசனம் அருளப்பட்டது.

""அநாதைச் சிறுவர்களைக் கண்காணித்து கொண்டிருங்கள். அவர்கள் திருமண பருவம் எய்தியதும் அவர்கள் அப்பொருளைப் பாதுகாத்து பராமரிக்கும் திறனறிந்து அவர்களின் பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி அவர்களின் பொருள்களைப் பெறுமுன் விரைந்து அளவுக்கதிகமாக அவர்களின் பொருள்களைப் புசித்து விடாதீர்கள். பாதுகாத்து பராமரிப்பவர் செலவராயின் அப்பொருளிலிருந்து எதையும் எடுக்க கூடாது. பராமரிப்பவர் ஏழையாயிருப்பின் அப்பொருளிலிருந்து நியாயமான அளவு புசிக்கலாம். அப்பொருளை அநாதைகளிடம் உரிய காலத்தில் ஒப்படைக்கும் பொழுது சாட்சியம் வைத்து கொள்ளுங்கள். அல்லாஹ் கணக்கெடுப்பதில் போதுமானவன்''

கத்பான் கிளையை சேர்ந்த மர்கத் பின் ஜைது அநாதையான அவரின் சகோதரரின் மகனை வளர்த்தார். சகோதரர் விட்டு சென்ற அநாதையின் அத்தனை சொத்துக்களுக்கும் பொறுப்பேற்றார். அநாதை உரிய வயதை அடையும் முன்னரே அவ்வளவு சொத்துக்களையும் செலவிட்டு தின்று தீர்த்தார்.

அப்பொழுது ""திட்டமாக எவர் அநாதைகளின் பொருள்களைச் சாப்பிடுகிறார்களோ அவர்கள் சாப்பிடுவது எல்லாம் வயிற்றில் நெருப்பைத்தான். அவர்கள் அடுத்து கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் நுழைவார்கள்'' என்ற குர்ஆனின் 4-10ஆவது வசனம் அருளப்பட்டது.

""உங்களை அழித்து நாசமாக்க கூடிய ஏழு செயல்களில் ஒன்று அநாதைகளின் பொருள்களை உண்பது'' அறிவிப்பவர் அபூஹிரைரா (ரலி) நூல்- புகாரி,

முஸ்லிம்.

""அநாதைகளுக்கு மோசம் செய்யாமல் மிக்க அனுதாபத்துடன் நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்று மீண்டும் எச்சரிக்கிறது எழில் மறை குர்ஆனின் 2-220 ஆவது வசனம்.

ஒருவரின் பொறுப்பில் உள்ள அநாதைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். அறிவன அறிய, ஆன்றாமை, சான்றான்மை பெற சகல வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தொழில், வணிக பொருளீட்டும் முயற்சிகளிலும் ஈடுபடுத்த வேண்டும். பாடுட்டு உழைத்து பக்குவமாய் ஈட்டிய பொருளை மிக்க கவனத்துடன் பாதுகாத்து தக்க செலவைச் சிக்கனமாய் செய்ய செம்மைப்படுத்த வேண்டும். அவ்வாறு தகுதி பெற்று திருமண வயது வந்ததும் போதிய நீதிவான்களான சாட்சிகள் முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும். இதுவே இறை கட்டளை.

- மு. அ. அபுல் அமீன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.