பதினென் படிவாழ் பரமா நமோ நமோ!

ஐந்தெழுத்து (நமசிவாய), ஆறெழுத்து (சரவணபவ), எட்டெழுத்து (ஓம் நமோ நாராயணாய) என்ற எண்கள் சிவன், முருகன், திருமால் முதலியவர்களைக் குறிப்பவை போல,
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ!

ஐந்தெழுத்து (நமசிவாய), ஆறெழுத்து (சரவணபவ), எட்டெழுத்து (ஓம் நமோ நாராயணாய) என்ற எண்கள் சிவன், முருகன், திருமால் முதலியவர்களைக் குறிப்பவை போல, பதினெட்டு என்ற எண் ஐயப்பனைக் குறிக்கும். சபரிமலையில் பதினெட்டு மலைகள் உள்ளன. அம்மலையில் உள்ள சந்நிதானத்தை அடைய பதினெட்டு படிகளைக் கடக்க வேண்டும். பதினெட்டின் சிறப்பைக் குறித்து, பதினென்படிக் கவசம், படிப்பாட்டு  முதலியவைகளும் உள்ளன.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐம்புலன்கள்,  மெய், வாய், கண், மூக்கு, செவி என்று பொறிகள் ஐந்து, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் மூன்று அல்லது முக்குணங்கள் ஆக 18 எனவும், 18 சித்திகள் எனவும் கூறப்படுகிறது. ஆக, இப்பதினெட்டையும் அடக்கியாண்ட பிறகு ஐயப்பனைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்குச் செல்ல கேரளம் மட்டுமில்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் முதலிய மாநிலங்களிலிருந்தும், அயல்நாடு வாழ் ஐயப்ப பக்தர்களும் வருகிறார்கள். ஒரு குருசாமி மூலம் இருமுடி கட்டி விரதமிருந்து ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நியதி.

மண்டல பூஜை, மகர விளக்கு இரண்டும் முக்கியமான விழாவாகும். அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய வருவார்கள். இதைத் தவிர தமிழ் மாதப் பிறப்பு, பங்குனி உத்திரம் மற்றும் ஆண்டில் சில குறிப்பிட்ட தினங்களில் கோயில் திறந்திருக்கும். 

திருமால் மோகினி வடிவம் எடுத்து மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்தார். திருமால் மற்றும் சிவபெருமானின் அம்சமாக ஒரு பங்குனி உத்திர தினத்தில் ஐயப்பன் அவதரித்தார். பந்தளராஜ மகாராஜனால் வளர்க்கப்பட்டு, மஹிஷி என்ற அரக்கியை அழித்து, சபரிமலையில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். 

ஐயப்பனைத் தரிசிக்கச் செல்வதற்கு விரதமிருந்து இருமுடி கட்டிச் செல்ல வேண்டும். இருமுடியின் ஒரு பக்கம் அபிஷேகத்திற்கு வேண்டிய நெய் நிரப்பிய முத்திரை தேங்காய், அபிஷேக சாமான்கள், கற்பூரம், அரிசி முதலியவைகளும், மற்றொரு பக்கம் யாத்திரைக்கு வேண்டிய அவசியமான பொருள்களையும் இருமுடியாகக் கட்டித் தலையில் சுமந்து செல்லும்போது "சுவாமியே சரணம் ஐயப்பா!' என்ற சரண கோஷத்துடன் செல்ல வேண்டும். பக்தியுடனும், நம்பிக்கையுடனும் சென்றால் ஐயப்பன் வேண்டியதை வழங்குவான்.

யாத்திரை செல்லும் வழியில் உள்ள குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோயில், பந்தளம் என்ற இடங்களில் அமைந்துள்ள சாஸ்தா கோயிலில் பாலனாகவும், குமாரனாகவும், பூரண, புஷ்கலா சமேதராக கிரஹஸ்த நிலையிலும் உள்ள ஸ்ரீஐயப்பனை வணங்கிச் செல்ல வேண்டும். 

எருமேலி சென்று இரண்டு பாதைகள் வழியாகப் பம்பையை அடையலாம். இங்கு வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் வில், அம்புடன் உள்ள சாஸ்தாவையும், அருகிலுள்ள வாவரையும் வணங்கிச் செல்ல வேண்டும்.  இங்கு ஐயப்பமார்களால் பேட்டை துள்ளல் நடைபெறும்.

எருமேலியிலிருந்து பம்பா வழியாக கோட்டைப்படி, பேரூர்த்தோடு அழுதாமலை அல்லது அழுதைமேடு (மகிஷியை வதம் செய்த இடம்), இஞ்சிப்பாறைக்கோட்டை,  உடும்பாறைக்கோட்டை, இலவந்தோடு, கரிவலம்தோடு, கரிமலை, சிறியானை வட்டம், பெரியானை வட்டம் கடந்து பெரிய பாதை வழியாக பம்பா நதியை அடைகின்றனர். 

பம்பாவிலிருந்து நீலிமலை அப்பாச்சிமேடு, சபரிபீடம், சரங்குத்தி, வழியாகச் சந்நிதியை அடையலாம். கோயிலுக்குள் பதினெட்டாம்படி வழியாகச் செல்ல வேண்டும், படியை நெருங்கியவுடன், கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கி, வலப் பக்கத்தில் தேங்காயை உடைத்து விட்டு, சரண கோஷத்துடன் படியேற வேண்டும். தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படிகளில் ஏறமுடியும். மற்றவர்கள் வேறு வழியாகச் செல்லலாம். 
சந்நிதானம் சென்று நெய் முதலிய அபிஷேக சாமான்களைக் கொடுத்து அபிஷேகம் செய்து பிரசாத நெய்யை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மூலஸ்தானத்தில் ஐயப்பன் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டிய வண்ணம் யோகபாதாசனத்தில், யோக பட்டத்துடன் அருள்பாலிக்கின்றார். பொன்னம்பலமேடு என்ற இடத்தில் தர்மசாஸ்தா, சன்னிதானத்தில் கூடியிருக்கும் பக்தர்களுக்கு தை மாத முதல் தேதி, ஜோதி உருவில் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த மகர ஜோதியைக் காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, இக்காட்சியைக் கண்டு பரவசமடைகின்றனர்.

தர்மசாஸ்தாவைத் தொடர்ந்து கன்னிமூலை கணபதி, வாவர், நாகர், மாளிகைப்புறத்தம்மன், மஞ்சமாதா முதலியோரைத் தரிசனம் செய்யவேண்டும். நடை சாத்தும்போது ஸ்ரீசாஸ்தா அஷ்டகம், "ஹரிவராசனம் ஸ்வாமி விஸ்வ மோகனம்' என்ற பாடல் பாடப்படும். 

படி வழியாக இறங்கி வழியில் உள்ள தலங்களைத் தரிசித்து ஊர் திரும்பி மாலையை அவிழ்த்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.
திருவனந்தபுரத்திலிருந்தும், கோட்டயத்திலிருந்தும், எர்ணாகுளத்திலிருந்தும், புலூரிலிருந்தும்  எருமேலி, பம்பா வருவதற்கு பேருந்துகள், தனியார் வாகனங்கள் உள்ளன.

16-11-2016 புதன் கிழமை கார்த்திகை மாதம் ஆரம்பம். மண்டல பூஜை மகோத்சவத்தை முன்னிட்டு சபரிமலைக் கோயிலில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரை நடை திறந்திருக்கும். 
- மருத்துவர் கைலாசம் சுப்ரமணியம் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com