காவிரி புஷ்கரம்! 

காவிரி நதி தீரத்தில் பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறும் தீர்த்த விழாவாகும்.  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா புஷ்கரமாகும்.
காவிரி புஷ்கரம்! 

சென்ற இதழ் தொடர்ச்சி...
காவிரி நதி தீரத்தில் பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறும் தீர்த்த விழாவாகும்.  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா புஷ்கரமாகும். இந்த ஆண்டு குருபகவான் துலா ராசியைக் கடக்கும்போது காவிரி மகா புஷ்கரம் நடைபெற உள்ளது.

சென்ற இதழில் குறிப்பிட்டுள்ளபடி, ஒவ்வோர் ஆண்டுக்கும் தொடர்புடைய நதி எது? என்பதை குரு (வியாழன், பிரஹஸ்பதி) அந்த காலகட்டத்தில் எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொறுத்து, சஞ்சரிக்கும் காலம் அளவு வரை புஷ்கரம் நடைபெறும். புஷ்கர காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோரும் ஒரு சேர இருந்து அருள்பாலிக்கின்றனர்.

குரு பகவான் மேஷ ராசி முதல் மீன ராசியைக் கடக்கும்போது கங்கா, நர்மதா, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, ப்ராணஹிதா  என பன்னிரண்டு நதிகளிலும் அந்தந்த ராசிகளில் புஷ்கர விழா, புனித நீராடல் நடைபெறும். அவ்வகையில் இவ்வாண்டு, காவிரி புஷ்கரம் ஆவணி மாதம் 27 ஆம் தேதி (12-09-2017) செவ்வாய்க்கிழமை முதல் புரட்டாசி மாதம் 8 ஆம் தேதி (24-09-2017) ஞாயிற்றுக்கிழமை முடிய நடைபெற உள்ளது.

கவேரன் என்ற ராஜரிஷி, புத்திரப்பேறு வேண்டி, பிரம்மாவை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தார். பிரம்மாவின் ஆசியினால் காவிரி ஒரு பெண் வடிவமாககவேரனை அடைந்தாள். அகஸ்திய ரிஷி அவளை மணந்து, தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டார். பிள்ளையாரின் அருளினால் கமண்டலத்திலிருந்து வெளிவந்து காவிரி நதியாகப் பாயத்தொடங்கியது. கவேர ரிஷியின் மகளாகப் பிறந்து, அகஸ்திய ரிஷியை மணந்து, திருவலஞ்சுழியில் ஏரண்ட ரிஷி மூலமாக பிலத்திலிருந்து வெளிவந்து, காவிரி மூன்று ரிஷிகளின் சம்பந்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது  என்பது வரலாறு. 

தென்னிந்தியாவில் 800 கி.மீ. நீளமுள்ள ஒரு பெரிய நதி காவிரி, கர்நாடக மாநிலத்தில், உற்பத்தியாகி, தமிழ்நாடு, வழியாகப் பாய்ந்து, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது.  இந்தப் புஷ்கர கால கட்டத்தில் கர்நாடக மாநிலத்தில், குடகில் உள்ள தல காவிரி, பாகமண்டலா, குஷால் நகரம், ஸ்ரீரங்கபட்டினம், மாண்டியா,  சிவனசமுத்ரா  தலகாடு, கனகாபூர், முத்தாதி முதலிய  முக்கிய தீர்த்தக் கட்டங்களில் நீராடி, கோயில்களில் வழிபடலாம்.

தமிழ்நாட்டில் ஹொகெனகல், மேட்டூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, நெரூர், வேலூர் (நாமக்கல்), திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார் முதலிய முக்கிய தீர்த்தக்கட்டங்களில் நீராடி, பிதுர்க் கடன்களை நிறைவேற்றி, இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து வழிபாடு செய்யலாம்.

காவிரிக்  கரையிலுள்ள ஊர்களில் ஆடி பதினெட்டாம் நாளான ஆடிப்பெருக்கன்றும், ஆடி, தை, மகாளய அமாவாசை தினங்களிலும், கும்பகோணத்தில் மகாமகத்தன்றும், மக்கள் காவிரியை வணங்கிப்  பூஜை செய்கின்றனர். ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக காவிரித் தாய்க்கு ஆடி மாதத்தில் சீர் வழங்கும் நிகழ்ச்சி, அம்மா மண்டபத்தில் நடைபெறுகிறது.

பொன்னி  வடகரையதனில் அறுபதுடன் மூன்று
 புகழ்பெறு தென் கரையதனில் நூற்றிருபத்தேழு

என்று காவிரி வடகரைத் தலங்கள்  நூற்றுத்தொன்னூறு தேவாரப் பாடல் பெற்ற தலங்களாக விளங்குகின்றன.  இவைகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர். பன்னிரு திருமுறைகளிலும் 90 பதிகங்களில் காவிரியின் பெருமையையும், அதன் வளமையையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். 

காவிரிக் கரையில் உள்ள திருக்கோயில்களில் சில:  பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதர், திருநணா என்ற பவானி முக்கூடல் சங்கமேஸ்வரர்,  ஸ்ரீரங்கம் அரங்கநாதர், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர், திருவையாறு ஐயாறப்பர், சுவாமிமலை சுவாமிநாதர், மகாமக சிறப்பு பெற்ற கும்பகோணத்தில் பல கோயில்கள், மயிலாடுதுறை மயூரநாதர், பூம்புகாரில் பல்லவனீச்சுரம் முதலிய கோயில்களில் சிலவாகும்.

சோழநாட்டுத் திருப்பதிகளாக நாற்பது திவ்ய தேசங்களும் காவிரிக் கரையில் அமைந்துள்ளன. ஆழ்வார்களும் பல பதிகங்களில் பொன்னி நதியின் சிறப்பைப் பாடியுள்ளனர். திருச்சேறை சாரநாதப் பெருமாள் காவிரிக்கு காட்சி கொடுத்ததால் இத்தலத்தில் காவிரிக்குக் கோயில் உள்ளது.

காவிரிக் கரையில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்பெறாத தலங்களும் அதிக அளவில் உண்டு.

காவேரி மஹாத்மியம் என்ற நூலில், கங்கையில் பல தினங்கள் நீராடிய புண்ணியம், மயிலாடுதுறையில் துலாகட்ட காவிரியில் நீராடுவதனால் கிடைக்கும் என்றும், காவேரியின் சிறப்புகள், மகான்களின் பெருமை முதலியன கூறப்பட்டுள்ளது. தட்சிண கங்கை என்றும் அழைக்கப்படுகிறது. 

மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புண்ணியத் தலம். கெளரி மாயூரம் என்றும் பெயர். அம்பிகை மயிலாய் வந்து பூஜை செய்த நிகழ்வை பரஞ்ஜோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில்,"மதிநுதல் இமயச் செல்வி மஞ்சையாய் வழிபட்டு ஏத்தும் துலாப் பொன்னித் தானம்' என்று குறிப்பிடுகிறார். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும், மயிலாடுதுறை காவிரிக் கரையில் துலா கட்டத்தில் நீராடல்  நடைபெறும். இம்மாதத்தில் கங்கை காவிரியில் கலப்பதாகவும் கங்கையில் குளிப்பவர்கள் கரைத்த பாவத்தை காவிரியில் கலந்து போக்கிக்கொள்வதாகவும்  வரலாறு. அபயாம்பிகை சமேத மயூரநாதர், மயிலாடுதுறையில் உள்ள இதர கோயில்களிலிருந்து சுவாமி, அம்மன் ரிஷப தீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்கள். 

மயிலாடுதுறை  காவிரி ஆற்றில் புஷ்கர காலங்களில் வழிபட காஞ்சி சங்கராசாரியார்கள், வைஷ்ணவ ஆசாரியர்கள், ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளின் அருளாசியுடனும் வழிகாட்டுதலின்படியும் காவிரி புஷ்கரம்- 2017 விழாக்கமிட்டி, மாவட்ட ஆட்சி நிர்வாகம், மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் சிறப்பான   ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். 

மேலும் விழாக்காலங்களில்  எல்லா ஆலயங்களிலிருந்தும் சுவாமி புறப்பாடு செய்து, தீர்த்தவாரி நடைபெறவும், வேத பாராயணம், மஹாருத்ர பாராயணம், சதுர்வேத பாராயணம், மஹாருத்ர ஹோமம், திருமுறை பாராயணம், லலிதா, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மற்றும் காவிரியில் ஆரத்தி எடுத்தல், கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் புஷ்கர விழா மலர் வெளியீடு, முதலியவைகள் நடைபெறுகின்றன. நாடெங்கிலிருந்தும் துறவியர்கள் அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள். 
தொடர்புக்கு:  98400 53289/   93446  46553.
- மருத்துவர்  கைலாசம் சுப்ரமணியம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com