இறைவன் தந்த பரிசு!
பரிசு இரண்டு வகைப்படும்! முதலாவது, ஒருவர் தன் திறமையை வெளிப்படுத்தி யாரும் அடையாத இலக்கை அடைந்ததற்கு அடையாளமாகக் கொடுக்கப்படும் பரிசு.


பரிசு இரண்டு வகைப்படும்! முதலாவது, ஒருவர் தன் திறமையை வெளிப்படுத்தி யாரும் அடையாத இலக்கை அடைந்ததற்கு அடையாளமாகக் கொடுக்கப்படும் பரிசு. இரண்டாவது, யார், எவர் என்று எதையும் அளவுகோலாகப் பார்க்காமல் பரிசு கொடுப்பவரின் அன்பின் அடையாளமாக பொருளையோ, பணத்தையோ பிறருக்கு அளிப்பது.
இயேசுவின் பிறப்பு மனிதருக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட பரிசு. நம் நன்மைக்காக ஒரு பாலகன் பிறந்தார். அவர் நமக்காகக் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானது. ஆலோசனைக் கர்த்தர் வல்லமையுள்ளவர். நித்திய பிதா; சமாதான பிரபு எனப்படுபவர் (ஏசாயா - 9 : 6) இயேசு மனிதருக்கு பரிசாகி, துணையாகி, தெய்வத்துக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மனிதனை கடவுளின் பிள்ளையாக மாற்றினார்.
கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா கிளாஸ் நிகோலஸ் என்பவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைப் பற்றுள்ளவர். இவர் சிறுவனாக இருக்கும் போதே எல்லோருக்கும் பரிசுகள் தந்து மகிழ்வார். பரிசு யாரால் வழங்கப்பட்டது என்பதை பரிசு பெறுபவரிடம் காட்டிக்கொள்ள மாட்டார். தன்னிடம் இருந்த பெரும் செல்வத்தை நடுஇரவில் ஏழைகளின் வீட்டுக் கதவருகே வைப்பார். சில சமயம் சிம்னி வழியாக வீட்டுக்குள் போட்டு விட்டு வருவார்.
முதுமையிலும் தம் சொத்துகளையெல்லாம் விற்று பரிசாக எல்லோருக்கும் கொடுத்தார். இவ்வாறு பரிசு தரும் அவரின் குணம் உலகெங்கும் பரவியது. சாண்டா கிளாஸ் நிகோலஸ் புனிதரானார். அவரின் ஆடை வெண்மையும், சிவப்பு நிறம் கலந்தும் அமைந்திருந்தது.
கிறிஸ்துமஸ் காலத்தில் பரிசு தரும் "கிறிஸ்துமஸ் தாத்தா' என்று அழைக்கப்பட்டார்.
இன்றும் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், பரிசு தருதலும் நடைபெறுவதில்லை.
கிறிஸ்துமஸ் மரம் வீடுகள், ஆலயங்கள், கடைகளிலும், பொது இடங்களிலும் வைக்கப்படுகிறது. அதில் ஒளி உமிழும் நட்சத்திரங்கள் கட்டியும், தேவதூதர்கள் சூழ, மாட்டுத்தொழுவம் போன்ற குடில்கள் அமைத்தும், அலங்கார விளக்குகள் அமைத்தும், காலுறையில் பரிசுப் பொருள்களைப் போட்டுக் கட்டி வைப்பார்கள்.
விடியற்காலத்தில் பிள்ளைகள் எழுந்து தங்கள் பரிசுகளை எடுத்து, இயேசு பாலனைத் தொழுவார்கள். இறைவனுக்கு நன்றி சொல்வார்கள். பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் பரிசு தந்து மகிழ்வார்கள். உறவினர்களுக்கும் பரிசுகளை அனுப்பி வைப்பார்கள். ஏழை எளிய மக்கள், சிறுவர் சிறுமிகளுக்கும் பரிசுகளை இனிப்புகளைக் கொடுப்பார்கள். கிறிஸ்துமஸ் கேக் வெட்டி மகிழ்வுடன் அனைவருக்கும் அளிப்பார்கள்.
இயேசுவை நம் இருதயத்தில் பிறக்கச் செய்வோம். எவரிடமும் அன்பு கூர்வோம். என்றும் இறையருள் நம்மோடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...