கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தேவியின் திருத்தலங்கள் 10 - பர்வதமலை பிரம்மராம்பிகை

நாம் எப்போதும் ஏதேனும் ஒரு தேவையுடன்தான் இறைவனை அணுகுகிறோம். ஒன்றை அடைந்ததும் மற்றொன்று எனத்  தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. திருப்தி என்பது இல்லை.

News image
Updated On :12 பிப்ரவரி 2021, 6:25 am

ஜி.ஏ. பிரபா

"சதுர்ப்பி: ஸ்ரீகண்டை சிவ யுவதிபி: பஞ்சபிரபி:

 ப்ரபிந்நாபி: சம்போர்} நவபிரபி மூலப்ரக்ருதிபி...'

- சௌந்தர்ய லஹரி

நாம் எப்போதும் ஏதேனும் ஒரு தேவையுடன்தான் இறைவனை அணுகுகிறோம். ஒன்றை அடைந்ததும் மற்றொன்று எனத்  தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. திருப்தி என்பது இல்லை.

ஆனால், அம்பாள் முழுத் திருப்தியுடன் பரமானந்த வடிவாய் இருக்கிறாள். பூரணமான ஞானம், சக்தியில் உயர்ந்து நிற்கிறாள். அவளே தயையிலும் ஒப்பில்லாதவள். 

சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள். ஆனாலும் அவள் சிவனைப் பிரிந்து பூலோகம் வந்து தவம் இயற்றுவது தன் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றவே. ஈசனுடன் தனித்திருக்கும் நேரங்களில் அவள் தன் குழந்தைகளின் நலத்தையே அவரிடம் யாசிக்கிறாள்.

ஒருமுறை அம்பிகை ஈசனிடம், "பூவுலகில் பிறந்த மனிதர்கள் ஒரே தலத்தை வழிபட்டு அறம், பொருள், இன்பம், வீடு பேறு ஆகியவற்றை அடைய வேண்டும். அதற்கு உகந்த தலம் எது?'' என்று வினவுகிறாள்.
"தேவி! அதற்குச் சிறந்த இடம் பர்வதமலை. உலக மக்களின் நலனுக்காக நீ அங்கு சென்று தவம் செய்!'' என்று கூற, பார்வதி தேவி கிளம்பி வந்து தவம் செய்த மலையே அவளின் பெயரால் "பர்வதமலை' என்று அழைக்கப்படுகிறது. "பிரம்மராம்பிகை' என்ற பெயரோடு அன்னை இங்கு அருளாட்சி செய்கிறாள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள இந்த மலை நாலாயிரத்து ஐநூறு அடி உயரம் கொண்டது. செங்குத்தான பாறையின் உச்சியில் அமைந்திருக்கிறது கோயில். "கைலாயத்தில் இருந்து ஈசன் தென்பகுதிக்கு வந்தபோது அவரது முதல் காலடி பட்ட இடம் பர்வதமலை!' என்று கூறப்படுகிறது.

"அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வரும்போது, அதிலிருந்து விழுந்த ஒரு பகுதி பர்வதமலை' என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதற்குச் சாட்சியாக இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்திருக்கின்றன. சித்தர்கள் வாழ்ந்த குகைளும் உள்ளன. அவற்றில் அவர்கள் சூட்சும வடிவில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. கைலாய மலைக்குச் செல்ல இயலாதவர்கள் இந்த மலையைத் தரிசித்தால் போதும். 

திருமாலுக்கும், பிரம்ம தேவருக்கும் தம்மில் யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டபோது, அடி முடி காண இயலா ஜோதி வடிவமாக ஈசன் தோன்றி முதல் அடி வைத்த இடம் பர்வத மலை. அடுத்த அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகக் கூறப்படுகிறது.

செங்குத்தான பாறை. பாறைகளால் ஆன படி. தண்டவாளப் படி, ஏணிப்படி, ஆகாயப்படி, கரடு முரடான படிகள் என்று சுமார் ஐந்து கி.மீ. தொலைவுக்கு மலையில் ஏற வேண்டும். கதவுகள் இல்லாத இந்தக் கோயிலுக்கென்று அர்ச்சகர்கள் கிடையாது. இறைவி பிரம்மராம்பிகை தனிச் சந்நிதியில் பேரழகுடன் குடி கொண்டிருக்கிறாள். பக்தர்களே தங்கள் கைகளால் ஆராதனை செய்து மகிழலாம்.

அம்மன் வேறெங்கும் காண முடியாத அழகுடன் ஜொலிக்கிறாள். இரவில் அம்மன் கன்னத்தில்  ஜோதி ஒளியைக் காண இயலும். கருவறையிலிருந்து பின்னோக்கிச் செல்லச் செல்ல அம்பிகை உயரமாக வளர்ந்து கொண்டே நம்முடன் வருவதைப் போல் தோன்றும். மலை உச்சியில் "ராட்சதத் திரிசூலம்' உள்ளது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மாமன்னன் நன்னன் இங்கு வந்து இறைவனை வணங்கிய செய்தி "மலைபடுகடாம்' என்னும் நூலில் உள்ளது. மலையின் அடிவாரத்தில் பச்சையம்மன் கோயில் உள்ளது. இதன் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளி அம்பிகையை வழிபடுகிறார்கள். "விசுவாமித்திரர்' என்ற பெயருடைய குன்றில் நின்று பார்த்தால் பர்வதமலை உச்சியில் உள்ள கோயில், நீர்வீழ்ச்சியின் அழகையும் கண்டு ரசிக்கலாம். மலை ஏறும் பாதை சிறிது அச்சமூட்டுவதாக இருந்தாலும், சுற்றிலும் இயற்கை அழகு நிரம்பி, மூலிகைக் காற்றை  உணர்ந்து அனுபவிக்க ஒருமுறை சென்று வரலாம்.

அம்பாளை நினைத்துக் கொண்டே மலை ஏறினால் சிரமம் தெரிவதில்லை. வாழ்வின் சிரமங்களையே அவள் நாமம் நீக்கும்போது இதென்ன பெரிய சிரமம் என்றே தோன்றுகிறது. சிவனும் சக்தியும் சமமானவர்கள். தன்னை வழிபாடு செய்பவர்களை மேன்மை அடையச் செய்பவள் சக்தி. எனவேதான் அவளை லலிதா சஹஸ்ரநாமம் "அகுலா, சமயாந்தஸ்தா' என்று துதிக்கிறது. அவள் "சமயா' என்றும் அழைக்கப்படுபவள்.

"மாறுபாடு இல்லாத மனம் படைத்தவள். எப்போதும் தன் குழந்தைகளின் நலனிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவள்' என்கின்றன வேதங்கள். அவை அம்பிகையை ஒளி ரூபமாகப் போற்றுகின்றன. 

சித்ரா பெüர்ணமி, ஆடிப்பூரம், ஆடிப்பதினெட்டு, கார்த்திகை தீபம் போன்றவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தீபம் ஏற்றி ஒருநாள் அபிஷேக, ஆராதனை செய்தால் வருடம் முழுதும், பூஜை செய்த பலன் கிட்டும் என்பது இம்மலையின் சிறப்பு.

பர்வதமலையில் அமர்ந்து தியானம் செய்தால் ஞானம் அருள்வாள் அம்பிகை என்பது உறுதி. "வெயில் நேரத்தில் மலை ஏற முடியாதவர்கள் மாலை நேரத்தில் ஏறும்போது பக்தர்கள் வழி தடுமாறாமல் இருக்க ஒரு நாய் முன்னால் சென்று வழி காட்டும்' என்று சிலிர்ப்புடன் கூறுகிறார்கள் பக்தர்கள். இம்மலைக்கு இரண்டு வழிகளில் செல்லலாம். கடலாடி வழி மற்றும் தென்மகாதேவமங்கலம் வழி. எவ்வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும்  ஒன்றாகச் சேர்ந்து விடுகிறது. 

கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும் குளம் உள்ளது. மலை ஏறும்போது குமரி நெட்டு, கடப்பாரை நெட்டு ஆகிய பகுதிகள் சற்று கரடு முரடானவை என்றாலும் அம்பிகையின் மீதான நம்பிக்கை நம்மை ஏற்றி விடும். இங்கு ஒரு சுனை உள்ளது. மருத்துவ குணம் கொண்ட இச் சுனை நீர் பல நோய்களைக் குணமாக்க வல்லது. மலையில் அச்சமூட்டும் பகுதிகளில் பாதை அமைத்தது அவளால் மட்டுமே சாத்தியம். சக்தி கொடுப்பது அவள் அருளே.

இங்கு விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. பெüர்ணமி நாள்களில் சிறப்புப் பூஜைகள், விடிய, விடிய யாகங்கள் நடக்கின்றன. "பாவங்கள் போக்கும் பர்வதமலை'யில் அமர்ந்து தன் அருள் மழையை நமக்குப் பொழிய அன்னை தவம் செய்கிறாள்..! 

(தொடரும்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.