தேவியின் திருத்தலங்கள்: திருவக்கரை வக்கிரகாளி அம்மன் - 8

பிரம்மம் அசைவில்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தின் காரியங்களைச் செய்யும் சக்தியே பராசக்தி.
தேவியின் திருத்தலங்கள்: திருவக்கரை வக்கிரகாளி அம்மன் - 8
Updated on
2 min read

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்

ஸ்த்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருத - மாகாஸ முபரி 

-செளந்தர்ய லஹரி 

பிரம்மம் அசைவில்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தின் காரியங்களைச் செய்யும் சக்தியே பராசக்தி. தட்சிணாமூர்த்தியாக யோக நிஷ்டையில் ஈசன் அமர்ந்திருக்கும்போது அவர் உள்ளிருக்கும் அம்பிகை வெளிப்பட்டு துஷ்டர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகிறாள். அம்பிகையே பரமாத்மா. அனைவருக்குள்ளும் இருந்து சக்தியைத் தருபவள். அவளின் அபாரமான சக்தியை வெளிப்படுத்துவது காளி ரூபம். அவதாரங்கள் எல்லாம் மனிதர்களை நல்வழிப்படுத்தவே உண்டாகின்றன. தன்னை நம்பி வருபவர்களைக் காக்கவே அவள் காளி அவதாரமும் எடுக்கிறாள். 

காளி என்றாலே பயமும், நடுக்கமும் உண்டாகும். ஆனால் அவளை உபாசிக்க நாளடைவில் பயம் நீங்கி அவளிடம் பக்தியும், ஈடுபாடும் உண்டாகி விடும். துஷ்ட நிக்ரகம் காரணமாகவே அம்பிகை எடுத்த உருவம் காளி. "அனைத்தும் நான்' என்னும் காளியைப் புரிந்து கொண்டால்  அவளிடம் பயம் ஏற்படாது. 

திருவக்கரையில் அம்பிகை அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை என்ற திருப்பெயர்களுடன் காட்சி அளித்தாலும் அவளின் வக்கிர காளி ஸ்வரூபமே மிகப் பிரசித்தம். குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த 
வக்கிராசுரன் என்ற அசுரனை அழிக்க ஈசனிடம் வரம் பெற்று, அன்னை காளியாக அவதாரமெடுத்து அவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றாள். 

சிவபெருமானை நோக்கி உக்கிர தவம் இருந்த வக்கிராசுரன் ஈசனிடமிருந்து ஏராளமான வரங்கள் பெற்றான். அதனால் ஆணவம் அடைந்த அவன் பல கொடுமைகள் செய்தான். மக்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்களை அடிமைப்படுத்தி எண்ண முடியாத அக்கிரமங்கள் செய்தான். வக்கிராசுரனை அழிக்க மகாவிஷ்ணுவை அனுப்புகிறார் சிவன். அதன்படி மகாவிஷ்ணு வக்கராசுரனுடன் போர் செய்து தன் சக்கராயுதத்தின் மூலம் அவனை அழிக்கிறார்.

அவனின் தங்கை துன்முகி என்பவள் அண்ணனைப் போலவே கொடூர குணமும், ஆணவமும் நிறைந்தவள். வக்கிராசுரனைப் போலவே அவளும் பல கொடுமைகளை மனிதர்களுக்குப் புரிகிறாள். ஈசன் அவளை அழிக்க பார்வதி தேவியை அனுப்பினார். 

கயிலையிலிருந்து கிளம்பிய அம்பிகை துன்முகியை அழிக்க காளியாக உருவெடுக்கிறாள். அப்போது துன்முகி நிறைமாத கர்ப்பிணி. "அவளை அழிக்கலாம். ஆனால், அந்தச் சிசு செய்த பாவம் என்ன? அன்னையின் வயிற்றில் அழகாய் உறங்கும் அதை ஏன் கொல்ல வேண்டும்?' என்று நினைத்த அன்னை, குழந்தையை பத்திரமாக எடுத்து தன் காதில் குண்டலமாக மாட்டிக் கொண்டு பின் துன்முகியை வதம் செய்தார். எனவேதான் இந்த இடம் வக்கரக்கரை என்றும், அன்னை வக்கிரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள்.

வராகநதி என்று அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் பெரிய அழகான ராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கிறது கோயில்.  இங்கு மூலவர் மும்முக லிங்கமாகக் காட்சி அளிக்கிறார். வேறு எங்கும் இல்லாத சிறப்பு இது. வக்கிரன் பூஜித்த லிங்கம் இது. கோடை காலங்களில் குளிர்ச்சியாகவும், குளிர் காலங்களில் வெப்பமும் அளிக்கும் தலம் இது. 

அசுரர்களை சம்ஹாரம் செய்ததால் அன்னை இங்கு ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதிசங்கரர் இங்கு வந்து அன்னையை சாந்தப்படுத்தி, இடது பாதத்தில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். "வக்ர சாந்தி திருத்தலம்' என்றே பெயர் வழங்குகிறது. 

ஊரின் நடுவில் ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே பிரமிப்பூட்டும் திருக்கோலத்துடன் விஸ்வரூபமாய் காளி காட்சி அளிக்கிறாள். தலைக்குப் பின்புறம் சுடர்விடும் தீக்கங்குகள். மண்டை ஓட்டு கிரீடம், இடது காதில் சிசுவின் குண்டலம். வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி கபாலம், அசுரர்களின் தலைகளையே மாலைகளாகத் தொடுத்து அணிந்திருக்கிறாள். 

ராகு, கேது கிரகங்களுக்கு அதிபதி என்பதால் வலது புறம் ஐந்து சுற்று, இடதுபுறம் நான்கு சுற்று என்ற கணக்கில் சந்நிதியைச் சுற்றி வர வேண்டும் என்பது ஐதீகம்.

இங்கு எல்லாமே வக்கிரமாக அமைந்திருக்கிறது. ராஜகோபுரம், கொடிமரம், நந்தி, சுவாமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி  வக்கிர நிலையில் காட்சி அளிக்கிறது. காளி ரூபத்தில் இருந்தாலும் அன்னையின் கருணை மழையாகப் பொழிகிறது பக்தர்கள் மேல்.

 "தாயே! நீயே அனைத்துத் தத்துவங்களுக்கும் அர்த்தமானவள். ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் நடுவில் உன் பதியுடன் கூடி மகிழும் நீயே எங்களின் குரலுக்கு செவி சாய்த்து ஓடி வருகிறாய். எங்கள் இதயத்தில் நீயே நடுநாயகமாய் இருக்கிறாய். உன்னை வணங்குவோருக்கு எந்த வினைகளும் இல்லை' என்கிறார் ஆதிசங்கரர்.

அன்னையை பிரார்த்தனை செய்தால் மன நிம்மதி, காரியத் தடைகள் விலகுதல், கர்ம வினைகள் நீங்குதல், ஜாதக ரீதியான வக்கிரங்கள் விலகுதல் ஆகியவை நிகழ்கின்றன. திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு கிடைக்க காளியை வணங்குகிறார்கள். காளிக்கு எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்யக் கயிறு கட்டி, எலுமிச்சம் பழதீபம் போட்டால் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோரிக்கைகளை எழுதி சூலத்தில் கட்டுகிறார்கள்.

பௌர்ணமி இரவு பன்னிரண்டு மணிக்கும், அமாவாசை பகல் பன்னிரண்டு மணிக்கும் வக்கிர காளியம்மனுக்கு ஜோதி தரிசனம் மிகச் சிறப்பாகக் காட்டப்படுகிறது. மிகப் பழைமையான பெரிய கோயில் கிழக்கு நோக்கி ராஜகோபுரம் விண்ணை முட்டும் உயரத்தில் நிற்கிறது. சோழ அரசர் கண்டராதித்தரின் மனைவி செம்பியன் மாதேவியால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் பண்பாடும், சிறப்புகளும் இங்குள்ள முதுமக்கள் தாழி மூலம் அறியப்படுகிறது. சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் இருந்த மரங்கள் காலப்போக்கில் பூமியில் புதைந்து அதே கிளைகள், பட்டைகளுடன் கூடிய தோற்றத்துடன் படிமங்களாக மாறிவிட்டன. அவையெல்லாம் இப்போது மரக்கல் காடுகளாகக் காட்சி அளிக்கின்றன.  "சிலிகா' என்ற கண்ணாடிக்கல் அம்மரங்களுள் ஊடுருவி மரங்களை உறுதியான கற்களாக மாற்றியிருக்கின்றன என்பது வரலாறு. அவற்றை "வக்கிராசுரனின் எலும்புகள்' என்று நம்புகிறார்கள் பக்தர்கள்.

(தொடரும்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com