தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அறம் காக்கும் அன்னை மதுரகாளி!

தமிழின் மிகச்சிறந்த காப்பியமான சிலப்பதிகாரம், நீதிக்காக ஒரு பேரரசே சரிந்த வரலாற்றைக் கூறுகிறது.

News image

மதுரகாளி

Updated On :10 ஏப்ரல் 2026, 10:21 am

தமிழின் மிகச்சிறந்த காப்பியமான சிலப்பதிகாரம், நீதிக்காக ஒரு பேரரசே சரிந்த வரலாற்றைக் கூறுகிறது. தன் கணவன் கோவலனுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் சினம்கொண்ட கண்ணகி, மதுரையை எரித்தாள். அந்த ஆவேசத்திலும் அவள் தர்மம் தவறவில்லை. "பசுக்கள், பெண்டிர், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட நல்லோருக்கு எந்தத் தீங்கும் நேரக்கூடாது; தீயவர்கள் இருக்கும் பக்கம் மட்டுமே தீ பரவட்டும்' என்று அவள் ஆணையிட்டாள்.

அநீதியைத் துல்லியமாக வேரறுத்த அந்த அறச்சீற்றத்தின் வடிவமே, இன்று பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மதுரகாளி அம்மனாக வீற்றிருக்கிறாள்.

ஈராயிரம் ஆண்டுத் தொன்மை வாய்ந்த இந்தத் தலம், வெறும் கோயில் மட்டுமல்ல; தர்மத்தை வெல்லச் செய்யும் ஒரு மகா சக்தி பீடமாகும். மதுரையை எரித்த பின் அமைதி தேடி வந்த கண்ணகி, சிறுவாச்சூரில் இருந்த செல்லியம்மன் கோயிலில் தஞ்சம் புகுந்தாள். அப்போது அங்கிருந்த செல்லியம்மன் அவளை எச்சரித்தாள். ஒரு தீய மந்திரவாதி தனது மந்திர சக்தியால் தன்னை அடிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும், அதனால் கண்ணகிக்கு ஆபத்து நேரலாம் என்றும் வருந்தினாள்.

இதைக் கேட்ட கண்ணகி மீண்டும் சினம்கொண்டு எழுந்தாள். காளியின் அம்சமாக மாறி, தனது ஞானச் சூலத்தால் அந்த அதர்ம மந்திரவாதியை அழித்தாள். இது, தெய்வீக ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தும் அகந்தையின் வீழ்ச்சியை நமக்கு உணர்த்துகிறது.

கண்ணகியின் வீரத்தையும் தார்மிகப் பேராற்றலையும் கண்டு செல்லியம்மன் நெகிழ்ந்தாள். தன் இருப்பிடத்தையே அவளுக்கு வழங்கிவிட்டு, செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமிக் குன்றுக்குச் சென்றாள். செல்லியம்மனின் இந்தத் தியாகத்தைப் போற்றிய அன்னை மதுரகாளி, வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மட்டுமே இங்கு தங்கி அருள்பாலிப்பதாக வாக்களித்தாள். இதனாலேயே இவ்விரு நாள்களுடன் அமாவாசை, பெளர்ணமி மற்றும் விசேஷ நாள்களில் மட்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. அந்த நன்றியுணர்வால், இன்றும் அன்னைக்குத் தீபாராதனை காட்டும் முன்பு, செல்லியம்மன் இருக்கும் மலைத் திசையை நோக்கி முதல் தீபாராதனை காட்டப்படுகிறது.

"மதுரகாளி' என்ற பெயருக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. மதுரையில் இருந்து வந்தவள் என்பது ஒரு காரணம். பக்தர்களின் மனங்களை மதுரமாக (இனிமையாக) குளிர்விப்பவள் என்பது மற்றொரு காரணமாகும். வடக்கு நோக்கி வீற்றிருக்கும் அன்னை, நான்கு கரங்களில் அட்சய கிண்ணம், உடுக்கை, பாசம் மற்றும் சூலம் ஏந்திச் சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர், சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மாபெரும் ஞானிகள் வணங்கிய பெருமை இத்தலத்துக்கு உண்டு.

இங்கு மாவிளக்கு வழிபாடு மிகவும் பிரபலம். இத்தலத்தில் உச்சிக்கால பூஜையின் போது, இரண்டு கோடாங்கிகள் அம்மனின் வரலாற்றைப் பாடலாகப் பாடுகின்றனர். அதன் பிறகே பூஜைகள் தொடங்குகின்றன. இது சிறுவாச்சூர் மண்ணின் தொன்மையான வழிபாட்டு முறையை வெளிப்படுத்துகிறது.

பல நூற்றாண்டுகள் பழைமையான சிறுவாச்சூர் சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 21-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. ஏப்ரல் 28-இல் காப்புக் கட்டுதலும், மே 7-ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டமும் சிறப்பாக நடைபெறும். மே 11 வரை நீடிக்கும் இந்தப் பெருவிழாவில் குடி அழைத்தல், கண்ணாடி ரத ஊர்வலம், திருக்கல்யாணம் எனப் பல்வேறு சடங்குகள் நடைபெறும்.

- முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.