பிறவிக் குறைபாட்டாலோ, நோய் பாதிப்பாலோ, விபத்தாலோ அங்கத்தில் குறைவு ஏற்பட்டு வருந்துபவர்கள் வழிபட வேண்டிய ஆகச் சிறந்த தலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கூனல் நிமிர்ந்தபுரம் கைலாசநாதர் கோயில்.
இன்றைய நாள்களில் கூனஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் இத்தலம் அக்காலத்தில் அடர்ந்த வனமாக இருந்தது.
இதன் ஒரு பகுதியில், தானவ மகரிஷி என்பவர் தமது சிஷ்யர்களுக்கு வேதங்களை உபதேசித்து வந்தார்.
முனிவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயம் அது. அவரின் வயிற்றில் இருந்த சிசு அங்கு ஒலித்த வேத ஆகமங்களைக் கேட்டு கேட்டு அதீத ஞானத்துடன் வளர்ந்து வந்தது.
ஒருநாள், இடையறாத பாடத்தினால் களைத்துப்போன முனிவரின் சிஷ்யன் ஒருவன், பாடவேளையில் சற்று கண்ணயர்ந்துவிட்டான். இதனால் தானவர் அந்தச் சீடனைக் கடுமையாகக் கடிந்துகொண்டார். அதனை கர்ப்பவாசத்தில் இருந்த சிசு கேட்டது.
"தொடர்ந்து பாடம் கேட்பதால் அயர்ச்சி ஏற்படுவது இயல்புதானே...'' என்று தாயின் வயிற்றுக்குள் இருந்து குரல் கொடுத்தது.
ஆத்திரமடைந்த மகரிஷி, ""பிறப்பதற்கு முன்னரே தகப்பனை எதிர்த்துப் பேசுகிற நீ அஷ்டகோணலாய்ப் பிறக்கக் கடவாய்'' என்று சாபமிட்டார். இதன் காரணமாக அந்த சிசு அப்படியே பிறந்தது.
இப்படி எட்டுக் கோணல்களுடன் பிறந்ததினால் அக்குழந்தைக்கு அஷ்டவக்கிரன் என்ற பெயர் நிலைத்து விட்டது.
காரண நிமித்தமாக அவ்வாறு பிறந்த அஷ்டவக்கிரர் பிற்பாடு தலைசிறந்த முனிவரானார். சிவபெருமானின் கட்டளைப்படி
அவ்வனத்திலேயே எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்.
அச்சமயத்தில் ஜனக மகாசக்கரவர்த்தியின் சபையில் இருந்த தலைமைப் பண்டிதனான வந்தி அகம்பாவத்துடன் திரிந்தான். தானவ மகரிஷி உள்ளிட்ட நூறு பேரை வாதத் திறமையால் வென்றான். அவனை தன் ஞானத் திறமையால் போட்டியில் வென்று தானவ முனிவர் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தார் அஷ்டவக்கிரர்.
தன்னால் உடற்கோணலாகப் பிறந்த மகனே தன்னைக் காப்பாற்றியதை நினைத்து குற்றவுணர்வினால் வருந்தினார் தானவ முனிவர். தம்முடைய தவறுக்குப் பிராயச்சித்தம் தேட விரும்பினார். அஷ்டவக்கிரருடன் தாமும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தம் மகனது ஊனம் நீங்கிட மனமுருகி அதே தலத்திலேயே வழிபட்டார்.
நல்லதொரு அஷ்டமி தினத்தன்று அவ்விருவருக்கும் அம்மையப்பர் அருளினால் கயிலாய தரிசனம் கிடைத்தது. அத்துடன் அஷ்டவக்கிரரின் உடற்கோணல்கள் பூரணமாக நீங்கி, மிக்க அழகுடன் கூடிய தோற்றமும் கிடைத்தது என்கிறது தல புராணம்.
குறுகலான சாலையின் அருகிலேயே ஒற்றை பிரகாரத்துடன் அமைந்திருக்கிறது இந்த சிறிய கோயில். தானவ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட லிங்கப் பெருமான் கைலாசநாதர் என்கிற பெயரில் கருவறையில் காட்சி தருகிறார்.
இவருக்குரிய அம்பிகை பார்வதி என்கிற திருநாமத்துடன் மூலக்
கோயிலுக்கு இடதுபுறத்தில் தெற்கு நோக்கியவளாய்க் காட்சி தருகிறாள். சிவாலயத்தின் பிரதான வாயில் அம்பிகை சந்நிதிக்கு நேராக அமைந்திருப்பது வித்தியாசமான அமைப்பு.
அழகாக அமைந்திருக்கின்ற சிறியதொரு சுற்றாலை. சிவபரிவாரங்கள் உரிய முறையில் ஆங்காங்கு சந்நிதி கொண்டு அமைந்திருக்கின்றனர்.
வலது பக்கத்தில் அஷ்டவக்கிரர் பூஜித்த அஷ்டலிங்கங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நேர்வரிசையில் கிழக்கு நோக்கி தனித்த மண்டபத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அஷ்டமூர்த்திகளாகக் காட்சியளித்தாலும் ஏகனாகிய இறைவன் ஒருவனே. இத்தத்துவத்தைச் சொல்வது போல் அஷ்டலிங்கங்களுக்கும் இணைசக்தியாக ஸ்ரீ செüந்தர்யநாயகி அம்மை என்கிற மற்றொரு அம்மை காட்சி தருகிறாள். அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் அனைத்து பேறுகளும் கிட்டும்.
மூன்றாம் குலோத்துங்க மன்னனின் காலத்தில் எழுப்பப்பெற்ற கற்றளி. காலப்போக்கில் சிதைவுபட, பின்வந்தவர்கள் தங்களுக்கு இயன்ற வகைகளில் சிற்சில மாற்றங்களுடன் பராமரித்து வருகின்றனர்.
பெüர்ணமியன்று ஆயிரம் தீபங்களை ஏற்றிச் செய்யப்படும் வழிபாடு விசேஷமானது. உடற்குறைவுகளினால் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு வருந்துபவர்கள் தரிசனம் செய்வதால் அக்குறை நீங்கிடும் என்பது தொன்று தொட்ட நம்பிக்கை.
உடற்குறைகள் மட்டுமல்லாது நம் மனக்குறைகளையும் போக்கிடும் இறையாக விளங்குகின்றார் இந்த கூனஞ்சேரி கைலாசநாதர் என்பது கண்கூடு.
தரிசனத்துக்காக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
கும்பகோணம் } சுவாமிமலை இடைவழியில் வலதுபுறமாக திருவைகாவூர் செல்லும் பாதை பிரியும். அதில் பயணித்தால் 10 கி.மீ. தொலைவுக்குள் கூனஞ்சேரியை அடையலாம்.
- சுஜாதா மாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி ஜிப்மரில் நோய் எதிா்ப்பியல் ஆய்வகம்! துணைநிலை ஆளுநா் திறந்துவைத்தாா்

30 வயதுக்குப் பின் கருவுறுதல் ஆபத்தா? யாருக்கெல்லாம் சிக்கல் ஏற்படும்?

மண்டோதரிக்கு திருமண வரமளித்த மகேசன்!

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



