மதுரை நகைக்கடை திருட்டு! ஸ்கூட்டியில் வந்த திருடன்.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!பாகிஸ்தான் உளவாளியின் ஒரு படத்துக்கு ஒரு ரகசிய ஆவணம் பகிர்ந்த விமானப் படை அதிகாரி!ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் மீண்டும் காணாமல்போன தமிழ்!அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை! அரசு விளக்கம்விவாதத்திற்கு மோடி வரட்டும்; உண்மையான தேச விரோதி யார் என்று காட்டுகிறேன்! ராகுல்பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா! இப்படி ஒரு அறிகுறியா?ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!நவ.16ல் உருவாகிறது அக்வான் புயல்!தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை

திவ்ய தேசங்களில் ஒன்று, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள ஸ்ரீ யோக நரஸிம்ம பெருமாள் திருக்கோயில்.

Updated On :

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்று, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள ஸ்ரீ யோக நரஸிம்ம பெருமாள் திருக்கோயில். இது திருக்கடிகை, கடிகாசலம் என்கிற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

"கடிகை' என்றால் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு நாழிகை நேரம்; "அசலம்' என்றால் மலை. இத்தலத்தில் 24 நிமிடங்கள் தங்கி பெருமாளை மனதார வழிபட்டாலே மோட்ச நிலையை அடைவர் என்பதால் இத்தலத்துக்கு கடிகாசலம், திருக்கடிகை என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சோழ மன்னர்களில் ஒருவரான பராங்குச சோழனால் திருப்பணி செய்யப்பட்டு, "சோழசிம்மபுரம்' என்று அழைக்கப்பட்டு வந்த இத்திருத்தலம், காலப்போக்கில் மருவி "சோளிங்கர்' என்றானது.

இரண்யகசிபு வதத்துக்குப் பிறகு, பிரகலாதனுக்குக் காட்சியளித்த நரஸிம்ம மூர்த்தியின் தெய்விகக் கோலத்தைக் காண முனிவர்களும், தேவர்களும் பேராவல் கொண்டனர். அதற்காக சப்தரிஷிகளான வசிஷ்டர், விஸ்வாமித்திரர், வாமதேவர், அத்ரி, பரத்வாஜர், ஜமதக்னி, கெüதமர் ஆகியோர் இந்த மலையில் அமர்ந்து கடுமையான தவம் மேற்கொண்டு வந்தனர். சப்தரிஷிகளின் தவத்துக்கு இடையூறு விளைவித்த அசுரர்களை அழிக்க நரஸிம்ம மூர்த்தியிடம் வேண்டப்பட்டது. சப்தரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அசுரர்களை அழிக்க பெருமாள் தனது சங்கு மற்றும் சக்ராயுதத்தை ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் வழங்கி அனுப்பினார். ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியும் அசுரர்களை வதம் செய்து ரிஷிகளைக் காப்பாற்றினார்.

அசுரர்கள் அழிக்கப்பட்டதும், ரிஷிகளுக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்கும் ஒரு கடிகை நேரம் சாந்த சொரூபியாக ஸ்ரீ யோக நரசிம்மராக திருக்காட்சி தந்தருளினார் பெருமாள்.

1305 படிகளைக் கொண்ட பெரிய மலையில் மூலவராக ஸ்ரீ யோக நரஸிம்மர் யோக முத்திரையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தாயார் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் தனிச் சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். இங்குள்ள விமானம் சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானம் என்று அழைக்கப்படுகிறது.

அதேபோன்று, பெரிய மலைக்கு அருகில் 406 படிகளைக் கொண்ட சிறிய மலையில் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், சதுர் புஜங்களுடன் அதாவது சங்கு, சக்கரம் மற்றும் ஜெப மாலையுடன் நான்கு திருக்கரங்களுடன் யோக நிலையில் காட்சி தருவது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். பெருமாளே தனது சங்கு } சக்கரத்தை ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியிடம் அளித்து, தன்னிடம் வரம்கேட்டு வரும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்ட வரத்தை அருள இக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

வருடத்தின் 11 மாதங்கள் யோக நிலையில் (கண் மூடிய நிலையில்) இருக்கும் ஸ்ரீ யோக நரஸிம்மர் மற்றும் ஸ்ரீ யோக ஆஞ்சநேய ஸ்வாமி, கார்த்திகை மாதத்தில் மட்டும் தங்களது திருக்கண்களைத் திறந்து பக்தர்களுக்கு நேரடியாக அருள்பாலிப்பதாக ஐதீகம். இதனால் கார்த்திகை மாதத்தில், அதிலும் குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

தவிர, நாம ஸங்கீர்த்தப் பிரியரான ஸ்ரீமன் நாராயணனை கார்த்திகை மாதத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம ஸங்கீர்த்தனக் குழுக்கள் தாள வாத்தியங்களுடன் கோஷ்டியாக பஜனைப் பாடல்களை பாடி, ஆடி ஆனந்தித்து தரிசனம் செய்வது இங்கு மட்டுமே காணக்

கிடைக்கும் காட்சி.

சாதாரண குக்கிராமங்களில் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் குழு முதல் பஜனை குழுவை அறக்கட்டளையாக நிர்வகிக்கும் குழுக்கள் வரை கார்த்திகை மாதத்தின் 5 வாரங்களும் இங்கு ஒன்று கூடுவதை குடும்ப விழா போல, குடும்ப சங்கமம் போல வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பில்லி, சூனியம், மனக்கவலை, பயம் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிள்ளைப் பேறு கிட்டாதவர்கள், அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீ யோக நரஸிம்மரையும், ஸ்ரீ யோக ஆஞ்சநேயரையும் வழிபட்டால், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பேயாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் இத்தலம் மங்களாசாசனம் (பாசுரங்கள் பாடி) செய்யப்பட்டுள்ளது. இவற்றில் திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட பாசுரமான "மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை' என்கிற பாசுரம் வைஷ்ணவர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற பாசுரமாகும்.

கார்த்திகை மாதத்தில் ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமியையும், ஸ்ரீ யோக ஆஞ்சநேய ஸ்வாமியையும் வழிபட்டு கஷ்டங்களைப் போக்கிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களை வாங்கிக்கொள்ளுங்கள்.

தரிசனத்துக்காக காலை 7 முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும் ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமி, ஸ்ரீ யோக ஆஞ்சநேய ஸ்வாமி கோயில்,

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

-பூ. சேஷாத்ரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.