முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
குறிப்பாக, டொனால்ட் டிரம்ப்பின் பிரிட்டன் சுற்றுப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் லண்டனிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவற்கு 90 நாள்கள் தடை விதித்து அதிபர் டிரம்ப் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், அந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு 120 நாள்களும், சிரியா நாட்டு அகதிகளுக்கு மட்டும் காலவரையின்றியும் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அது மதத் துவேஷத்தை வெளிப்படுத்துவதாகக் கூறி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
குடியேற்றத் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பிரிட்டனிலும் அந்த உத்தரவு கடும் கண்டனத்தைச் சந்தித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் பிரிட்டனில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள சுற்றுப்பயணத்தை ரத்து செய்யுமாறு பிரிட்டன் அரசைக் கோரி, அந்த நாட்டு நாடாளுமன்ற இணையதள விண்ணப்பத்தில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர்.
எனினும், டிரம்ப்பின் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய பிரதமர் தெரஸா மே மறுப்பு தெரிவித்தார்.
இந்தச் சூழலில், டிரம்ப்புக்கு எதிராகவும், அவரது பிரிட்டன் சுற்றுப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் தெரஸா மே-யுக்கு எதிராகவும் லண்டனில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள டெளனிங் தெருவிலிருந்து, பிரிட்டனுக்கான அமெரிக்கத் தூதரகம் நோக்கி நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஆதரவாகவும், டிரம்ப்பின் கொள்கைகள் மற்றும் டிரம்ப் விவகாரத்தில் தெரஸா மே-யின் அணுகுமுறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்று "தி கார்டியன்' நாளிதழ் தெரிவித்தாலும், அதில் சுமார் 40,000 பேர் பங்கேற்றதாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
லண்டன் தவிர மான்செஸ்டர், பர்மிங்ஹம் உள்பட பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் டிரம்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பாரிஸ், பெர்லின்: பிரிட்டன் மட்டுமன்றி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலும், ஜெர்மனி தலைநகர் பெர்லினிலும் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் தலா 10,000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர் ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் மே மாதம் இத்தாலி செல்லவிருப்பதை அமெரிக்க அதிபர் மாளிகை உறுதிப்படுத்தியது.
உத்தரவுக்கு இடைக்காலத் தடை: முன்னதாக, டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக, வாஷிங்டன் மாகாண அட்டர்னி ஜெனரல் பாப் ஃபெர்குசன், சியாட்டில் நகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட், அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்தார்.
அதையடுத்து, அந்த நீதிமன்றத் தீர்ப்பு உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும், குடியேற்ற விவகாரங்களில் டிரம்ப்பின் உத்தரவுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டு வந்த நடைமுறைகளே கடைப்பிடிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சியாட்டில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி நீதித் துறையை உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேல்முறையீடு: இதற்கிடையே, சியாட்டில் நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு வழக்குரைஞர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசின் மேல்முறையீட்டு மனு மீதான பதிலைத் தாக்கல் செய்யுமாறு பல்வேறு அமைப்பினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தற்போதைய சூழலில், அமெரிக்காவில் அதிபரின் அதிகாரத்துக்கும், நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டில் மாபெரும் அரசியல் சாசன சிக்கல் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி

என்.ஐ. பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்

டெம்போ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


