உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி: நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ராஜபட்ச கோரிக்கை

""நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை நடத்துங்கள்'' என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி: நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ராஜபட்ச கோரிக்கை
Updated on
1 min read

""நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை நடத்துங்கள்'' என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இலங்கையில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என 340 கவுன்சில்களுக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ராஜபட்சவின் இலங்கை மக்கள் முன்னணி (எஸ்எல்பிபி) கட்சி 225 கவுன்சில்களில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி(யுஎன்பி) 41 கவுன்சில்களிலும், அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி (எஸ்எல்எஃப்பி) 11 கவுன்சில்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த வெற்றிக்குப் பிறகு உற்சாகம் அடைந்துள்ள ராஜபட்ச, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த சிறீசேனா - ரணில் விக்கிரமசிங்க கூட்டணி அரசு, அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கவில்லை. இந்த அரசின் திட்டங்களை மக்கள் நிராகரித்துவிட்டனர். ஆனால், நிலையான அரசு அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதை உணர்த்தும் விதமாகவே, உள்ளாட்சித் தேர்தலில் எனக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். எனவே, நிலையான அரசு அமைவதற்கு நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை நடத்துங்கள் என்றார் அவர்.
இரண்டு முறை அதிபர் பதவி வகித்த ராஜபட்ச, கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்ரிபாலா சிறீசேனாவிடம் தோல்வியடைந்தார். இலங்கையில் வரும் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகே பொதுத் தேர்தலை நடத்த முடியும். 
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க ராஜபட்ச விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com