சம்ஜௌதாவைத் தொடர்ந்து தில்லி - லாகூர் பேருந்து சேவையையும் நிறுத்தியது பாகிஸ்தான்

சம்ஜௌதா விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தில்லி - லாகூர் பேருந்து சேவையும் வரும் திங்கட்கிழமை முதல் ரத்துசெய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சம்ஜௌதாவைத் தொடர்ந்து தில்லி - லாகூர் பேருந்து சேவையையும் நிறுத்தியது பாகிஸ்தான்


இஸ்லாமாபாத்: சம்ஜௌதா விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தில்லி - லாகூர் பேருந்து சேவையும் வரும் திங்கட்கிழமை முதல் ரத்துசெய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சிறப்புப் பிரிவை ரத்து செய்யும் இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

1999ம் ஆண்டு முதன் முதலில் இந்த பேருந்து சேவை துவங்கப்பட்டது. பிறகு 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதலைத் தொடர்ந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இது மீண்டும் 2003ம் ஆண்டு ஜூலை முதல் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பேருந்து சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த நடைமுறை திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் தில்லி கேட் அருகே உள்ள அம்பேத்கர் விளையாட்டரங்கு பேருந்து நிலையத்தில் இருந்து ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் லாகூருக்கும், பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பேருந்துகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமையிலும் தில்லி - லாகூர் இடையே இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவை இந்தியா அண்மையில் ரத்து செய்தது. அதன்படி, இந்தியாவுடனான ராஜீய உறவை முறித்துக் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து,  இந்தியத் தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியது. இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கமிட்டிக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதைப் போலவே சில நாட்களுக்கு முன்பு சம்ஜௌதா ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

ரயில் சேவை ரத்து குறித்து இஸ்லாமாபாதில் அந்நாட்டு ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியதாவது, சம்ஜௌதா விரைவு ரயில் சேவையை ரத்து செய்வதென்று முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தான் ரயில்வே அமைச்சராக நான் பதவி வகிக்கும் வரை, சம்ஜௌதா விரைவு ரயில் சேவை நடைபெறாது.

அடுத்த 3 முதல் 4 மாதங்கள் மிகவும் முக்கியமானதாகும். போர் நடைபெற்றாலும் நடைபெறலாம். ஆனால் பாகிஸ்தான் போரை விரும்பவில்லை.

பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால், அதுதான் கடைசி போராக இருக்கும். சம்ஜௌதா ரயிலில் உள்ள பெட்டிகள், ஈத் பண்டிகை செல்லும் யாத்ரீகர்களின் பயணத்துக்கு பயன்படுத்தப்படும் என்றார் ஷேக் ரஷீத் அகமது.

வாகா எல்லையில் ரயில் நிறுத்தம்: இதனிடையே, பாகிஸ்தான் பகுதியில் வந்து கொண்டிருந்த சம்ஜௌதா விரைவு ரயில், பாதுகாப்பு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி வாகா எல்லையில் அந்நாட்டு அரசு நிறுத்தி விட்டது. அப்போது 110 இந்தியப் பயணிகள் ரயிலில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த ரயிலுக்கு இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளித்து, அட்டாரி வரை இயக்கச் செய்தனர். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டபோது, சம்ஜௌதா விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட சம்பவம் இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளது. எனினும், அந்த ரயில் சேவை பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.

கடந்த 1971ஆம் ஆண்டு போருக்குப் பிறகு சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி  சம்ஜௌதா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில், இந்தியப் பகுதியில் தில்லியிலிருந்து அட்டாரி வரையிலும், பாகிஸ்தான் பகுதியில் லாகூரில் இருந்து அட்டாரி வரையிலும் இயக்கப்பட்டது.  இரு நாடுகளிலும் தனித்தனி ரயில் இயக்கப்படும். அந்த ரயில், அட்டாரி வந்ததும், பரஸ்பரம் இரு நாட்டு பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய ரயிலுக்கு மாறுவது வழக்கம். அந்த ரயிலில், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3ஆம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com