இந்தியாவில் தடை நீடிப்பதால் வெங்காயத் தேவைக்கு சீனாவை நம்பி இருக்கும் நேபாளம்

நேபாளத்தின் பெரும்பான்மை வெங்காயத் தேவையை பூர்த்தி செய்வது காத்மாண்டு நகரில் இருக்கும் காளிமதி காய்கறி மற்றும் பழச் சந்தையே. மிகப்பெரிய சந்தை இது. 
Chinese onion demand soar in Nepal
Chinese onion demand soar in Nepal

காத்மாண்டு, டிசம்பர் 17: இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதலே வெங்காயத்திற்கான தேவை அதிகரித்திருப்பதாலும், உற்பத்தி குறைந்ததாலும் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்திருக்கிறது மத்திய அரசு. இதனால், உள்நாட்டுத் தேவையைக் கருதி இந்தியாவில் இருந்து வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, தனது வெங்காயத் தேவைக்கு இதுவரை இந்தியாவை பெரிதும் நம்பியிருந்த நேபாளம் தற்போது சீனாவிடம் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யத் தொடங்கி இருக்கிறது. இதனால் நேபாளத்தில் சீன வெங்காயத்துக்கு மவுசு கூடியுள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தின் பெரும்பான்மை வெங்காயத் தேவையை பூர்த்தி செய்வது காத்மாண்டு நகரில் இருக்கும் காளிமதி காய்கறி மற்றும் பழச் சந்தையே. மிகப்பெரிய சந்தை இது. இங்கு நாளொன்றுக்கு 90 முதல் 100 டன் வரை வெங்காய வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால், இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் இந்தச் சந்தைக்கு சீனாவில் இருந்து வரும் வெங்காயத்தின் அளவு 40 முதல் 45 மெட்ரிக் டன் அளவுக்குக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இந்திய வெங்காயத் தடையானது நேபாளத்தின் வெங்காய வர்த்தகத்தை 50% குறைத்து விட்டது என்கிறது காளிமதி சந்தை வளாகம்.

இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக காத்மாண்டுவில் விற்பனையாகி வருவது 100% சீன வெங்காயம் மட்டுமே என்கிறார் காளிமதி பழங்கள் மற்றும் காய்கறி சந்தை மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனர் தேஜேந்திர பிரசாத்.

ஆனால், இதெல்லாம் இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது என்றும் இதற்கு முன்பு நேபாளம் தங்களுக்குத் தேவையான மொத்த வெங்காயத்தையும் இந்தியாவிடமிருந்தே இறக்குமதி செய்து வந்ததாகவும், மிகக்குறுகிய அளவிலான தேவைக்கு மட்டுமே சீன வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன என்றும் காளிமதி சந்தையில் காற்கறி மற்றும் பழங்கள் மொத்த வியாபாரம் செய்து வரும் சுமார் 500 கடைகளைக் கையாளும் வாரியம் தெரிவித்துள்ளது.

10 நாட்களுக்கு முன்பு வரையிலும் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டுக் கொண்டு வரப்பட்ட வெங்காயம் கொஞ்சம் சேமிப்பில் இருந்ததாகவும் அதை வைத்து சில நாட்களைத் தங்களால் சமாளிக்க முடிந்தது எனவும் இப்போது அந்தக் கடத்தல் வெங்காயமும் தீர்ந்து விட்ட நிலையிலும் தற்போது தங்களது வெங்காயத் தேவையை நிறைவு செய்ய நேபாளம், சீனாவை நம்பியுள்ளது என்றும் நேபாள வியாபாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

‘சீன வெங்காயம் நேபாளத்தில் ரசுவகதி மற்றும் டடோபனி எல்லைப் பகுதி வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் இப்படியான நெருக்கடி நிலையில் சீன வெங்காயம் நேபாள நுகர்வோருக்கு சரியான  மாற்றாக உள்ளது’ என்றும் சீன, நேபாள எல்லைப்பகுதிகளில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெங்காய வர்த்தகர்கள் இதைப்பற்றிப் பேசுகையில், சமீபகாலமாக வெங்காயத்தை இறக்குமதி செய்ய இந்த இரண்டு எல்லைப்புறங்களையும் தாங்கள் பயன்படுத்தி வருவதாகவும், வெங்காய இறக்குமதிக்கான சுங்க அனுமதியானது முன்பை விட தற்போது சற்று மென்மையானதாகவும், எளிமையானதாகவும் இருப்பதாகத் தெரிவித்தனர்.

‘முன்னதாக, சீன வெங்காயம் காத்மாண்டு பள்ளத்தாக்கில் மட்டுமே விற்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக நாங்கள் அதை நாராயங்கட், பட்வால் மற்றும் போகாரா போன்ற பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வருகிறோம். இப்போது இது எல்லா இடங்களிலும் சென்று கொண்டிருக்கிறது’ என்று காளிமதி சந்தையில் ஒரு வர்த்தகர் ரிஷி ஸ்ரேஸ்தா , சின்ஹுவாவிடம் கூறினார்.

சீன வெங்காயத்தின் மொத்த விலை காளிமதி சந்தையில் ஒரு கிலோவிற்கு 110-140 நேபாளி ரூபாய் வரம்பில் உள்ளது, அதேசமயம் இது வெளியில் வெவ்வேறு விகிதங்களில் விற்கப்படுகிறது. இருப்பினும், இந்திய வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 250 நேபாளி ரூபாய் வரை எட்டியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வர்த்தக மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நேபாளம் கடந்த 2018-19 நிதியாண்டில் 5.62 பில்லியன் நேபாள ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை இறக்குமதி செய்தது.

நேபாளி ரூபாய் 14.4 மில்லியன் பண மதிப்பிலான புதிய வெங்காயம் மற்றும் சாலட் வகை வெங்காயத்தையும், சுமார் 5.19 மில்லியன் பண மதிப்பிலான உலர் வெங்காயத்தையும் ஜூலை நடுப்பகுதியில் தொடங்கிய நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நேபாளம் இறக்குமதி செய்துள்ளதாகவும் அந்நாட்டு வெங்காய வியாபாரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

விவசாய நாடாக இருந்தபோதிலும், நேபாளம் வெங்காயத்திற்காக மட்டுமல்ல, மேலும் பல காய்கறிகள் மற்றும் பழங்களுக்காகவும் கூட இந்தியாவையும் பிற அண்டைநாடுகளையுமே நம்பி இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com