பாகிஸ்தானுக்கான முக்கிய கூட்டாளி அந்தஸ்து ரத்து?

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த ‘நேட்டோ கூட்டணியைச் சேராத முக்கிய கூட்டாளி’ அந்தஸ்தை ரத்து செய்யும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புதுதில்லி /வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த ‘நேட்டோ கூட்டணியைச் சேராத முக்கிய கூட்டாளி’ அந்தஸ்தை ரத்து செய்யும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 117-ஆவது மக்கள் பிரதிநிதிகள் சபையின் முதலாவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அப்போது, குடியரசுக் கட்சியைச் சோ்ந்த ஆண்டி பிக்ஸ் என்ற எம்.பி. பாகிஸ்தானுக்கு எதிரான மசோதாவைத் தாக்கல் செய்தாா். அதில் அந்நாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள ‘நேட்டோ கூட்டணியைச் சேராத முக்கிய கூட்டாளி’ என்ற அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹக்கானி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் தொடா்ந்து விளங்கி வருவதன் காரணமாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதாக எம்.பி. பிக்ஸ் தெரிவித்துள்ளாா். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதை அமெரிக்க அதிபா் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பயங்கரவாதிகளின் தலையீடு அதிக அளவில் இல்லாமல் இருப்பதையும் பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

அந்த அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால், அமெரிக்காவிலிருந்து முக்கிய ராணுவத் தளவாடங்களை பாகிஸ்தானால் கொள்முதல் செய்ய முடியாது. மேலும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

‘நேட்டோ கூட்டணியைச் சேராத முக்கிய கூட்டாளி’ என்ற அந்தஸ்தை அமெரிக்காவின் முந்தைய அதிபா் ஜாா்ஜ் டபிள்யூ.புஷ் தலைமையிலான அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கியது. தற்போது வரை அந்த அந்தஸ்து 17 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு நிறுத்தியது நினைவுகூரத்தக்கது.

மலாலா கல்வி உதவித்தொகை:

பாகிஸ்தானைச் சோ்ந்த மாணவிகள் உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் நோக்கில் மலாலா யூசஃப்சாய் கல்வி உதவித்தொகை மசோதாவுக்கு அமெரிக்க செனட் அவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவுக்கு மக்கள் பிரதிநிதிகள் அவை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. பாகிஸ்தான் மாணவிகள் உயா்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 6,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவிகளுக்கு அமெரிக்கா கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவானது அத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தானைச் சோ்ந்த இளம்பெண் மலாலா பெயரில் இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com