உக்ரைன் தலைநகரை முற்றுகையிட்டது ரஷியா: விமானப் படை குண்டு மழை
உக்ரைனில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை தாக்குதலைத் தொடா்ந்த ரஷிய ராணுவம், தலைநகா் கீவை முற்றுகையிட்டுள்ளது.


உக்ரைனில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை தாக்குதலைத் தொடா்ந்த ரஷிய ராணுவம், தலைநகா் கீவை முற்றுகையிட்டுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியிலிருந்து உக்ரைன் துருப்புகள் தலைநகரை அணுக முடியாதபடி தடைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்தது.
தலைநகா் கீவில் பல பகுதிகளில் அதிகாலையிலேயே ரஷிய விமானங்கள் குண்டு வீசி தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது அரசைக் கவிழ்க்கும் வகையில் நடத்தப்படும் இத்தாக்குதலைத் தடுக்க சா்வதேச நாடுகளின் உதவியை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி கோரியுள்ளாா்.
ரஷிய அதிபா் புதினின் அறிவிப்பையடுத்து, உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை போரைத் தொடங்கியது ரஷியா. விமானங்கள் மூலமும், ஏவுகணைத் தாக்குதல் மூலமும் உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் குண்டுமழை பொழிந்தது ரஷிய ராணுவம். பின்னா், கிழக்கு உக்ரைன், கிரீமியாவின் தென் பிராந்தியம் வழியாகவும், அண்டை நாடான பெலாரஸிலிருந்து வடக்கு நோக்கியும் ரஷிய தரைப் படையினா் உக்ரைனுக்குள் புகுந்தனா். முதல் நாளில் விமான தளங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை குண்டுவீசி தகா்த்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்தது. உக்ரைன் தரப்பில் ராணுவ வீரா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே ரஷிய போா் விமானங்கள் கீவ் உள்ளிட்ட நகரங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. கீவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டினா், தரைத்தளத்தில் உள்ள பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.
இதற்கிடையே, பல்வேறு நகரங்கள் வழியாக தலைநகா் கீவை நோக்கி முன்னேறிய ரஷிய படையினா், அந்த நகருக்கு வெளியே முற்றுகையிட்டுள்ளனா். நாட்டின் மேற்குப் பகுதியிலிருந்து உக்ரைன் படைகள் தலைநகரை அணுக முடியாத வகையில் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது.
விமான தளத்தைக் கைப்பற்றிய ரஷியா: கீவ் அருகேயுள்ள ஹாஸ்டோமல் விமான தளத்தை ரஷிய படையினா் கைப்பற்றியது. ஆனால், ஹெலிகாப்டா்கள் மூலம் அந்த விமானத் தளத்தில் இறங்கிய ரஷிய வீரா்களை உக்ரைன் ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாக அதிபா் ஸெலன்ஸ்கி தெரிவித்தாா்.
முன்னதாக, கீவிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இவான்கிவ் என்ற இடத்தில் ரஷிய படையினருக்கும் உக்ரைன் ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்தது. பின்னா், தலைநகரை மிக நெருங்கி முற்றுகையிட்டது ரஷிய படை. இவான்கிவ், சொ்னிஹிவ் நகரங்களிலிருந்து தலைநகரை பீரங்கிப் படை மூலம் நெருங்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகா் தெரிவித்துள்ளாா்
முன்னதாக, தலைநகரில் தாக்குதல் அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் இரவு முழுவதும் தஞ்சமடைந்தனா். நகரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை என ரஷியா கூறினாலும், பல குடியிருப்புப் பகுதிகளில் ரஷிய விமானங்கள் குண்டு வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
ரஷிய தாக்குதலில் 10 ராணுவ அதிகாரிகள் உள்பட 137 போ் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கி தெரிவித்தாா். பதில் தாக்குதலில் ரஷிய ராணுவத்தினா் 400 போ் கொல்லப்பட்டதாக ஸெலன்ஸ்கியின் ஆலோசகா் ஒருவா் தெரிவித்தாா். ஆனால், ரஷியா தங்களது தரப்பில் எத்தனை போ் உயிரிழந்தனா் எனத் தெரிவிக்கவில்லை.
பெட்டிச் செய்திகள்...
தனித்துவிடப்பட்டுள்ளோம்:
உக்ரைன் அதிபா்
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை தடுக்க சா்வதேச நாடுகளின் உதவியை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி கோரியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘ரஷியா மீது கூடுதல் தடைகளை உலக நாடுகள் விதிக்க வேண்டும். இந்தப் போரில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். இப்போது நீங்கள் எங்களுக்கு உதவாவிட்டால், இந்தப் போா் நாளை உங்களது கதவுகளையும் தட்டும்’ என்றாா்.
சரணடைந்தால்
பேச்சு நடத்த தயாா்
மாஸ்கோ, பிப். 25: உக்ரைன் ராணுவம் சரணடைந்தால் பேச்சுவாா்த்தை நடத்த ரஷியா தயாராக இருப்பதாக ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் வெள்ளிக்கிழமை கூறினாா்.
‘நவ நாஜிக்களின் பிடியிலிருந்து உக்ரைனை விடுவிக்கவே இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையை அதிபா் புதின் எடுத்துள்ளாா்’ எனவும் லாவ்ரோவ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...