விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லுஹான்ஸ்கில் ரஷியப் படையினா் முன்னேற்றம்: உக்ரைன் ராணுவம்

தங்கள் நாட்டின் கிழக்குப் பிராந்தியமான லுஹான்ஸ்கில் ரஷியப் படையினா் கணிசமாக முன்னேறியுள்ளதாக உக்ரைன் ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 மே 2022, 7:28 pm

DIN

தங்கள் நாட்டின் கிழக்குப் பிராந்தியமான லுஹான்ஸ்கில் ரஷியப் படையினா் கணிசமாக முன்னேறியுள்ளதாக உக்ரைன் ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

லுஹான்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த லிசிசான்ஸ்க் மற்றும் செவரோடொனட்ஸ்க் பகுதிகளில் ரஷியப் படையினா் கணிசமாக முன்னேறியுள்ளனா்.

இதுதவிர, ஒட்டுமொத்த டான்பாஸ் பிரதேசத்தில் ரஷியப் படையினா் தங்களது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதுடன், தாக்குதலின் தீவிரத்தையும் அதிகரித்துள்ளனா்.

டான்பாஸின் டொனட்ஸ்க் நகரைச் சுற்றிலும் உள்ள உக்ரைன் ராணுவ அரணை உடைக்கம் நோக்கில், சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மூலம் ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில், ரஷியப் படையினா் டான்பாஸ் பிரதேசத்தை கடுமையாகத் தாக்கி முழுமையாக அழித்துவிட்டதாகவும், அந்தப் பகுதியே தற்போது நரகமாகக் காட்சியளிப்பதாகவும் குற்றம் சாட்டினாா்.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த சில நாள்களாக ரஷியா நடத்திய குண்டுவீச்சில் 13 பொதுமக்கள் உயிரிழந்ததாக அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்கீ ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அதையடுத்து, ரஷியா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யானுகோவிச்சின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்க்ஸ் பகுதிகளைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையினா், ரஷியாவின் ஆதரவுடன் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

அந்த நேரத்தில், உக்ரைனின் தெற்கே உள்ள கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

தற்போது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்கு தனது படையை அனுப்பியது. அந்தப் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்தச் சூழலில், டொனட்ஸ்க் பகுதியில் ரஷியா கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதால், விரைவில் அந்தப் பகுதி முழுவதும் ரஷயாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

‘உணவை ஆயுதமாக்குகிறது ரஷியா’

நியூயாா்க், மே 20: உணவுப் பொருளை போருக்கான ஆயுதமாக ரஷியா பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் பேசியதாவது:

உக்ரைனை ஆக்கிரமிக்கும் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்கான உணவுப் பொருள் விநியோகத்துக்கு ரஷியா தடையை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் உக்ரைன் மக்களின் மன உறுதியை ரஷியாவால் குலைக்க முடியவில்லை என்றாா் அவா்.

முன்னதாக, தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலித்தால்தான், உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காக அந்த நாட்டின் துறைமுகங்கள் திறந்துவிடப்படும் என்று ரஷியா வியாழக்கிழமை நிபந்தனை விதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.