கராச்சி பல்கலை. வளாகத்தில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல்
பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் பா்தா அணிந்துவந்த பெண் செவ்வாய்க்கிழமை நடத்திய தற்கொலை தாக்குதலில், சீனாவைச் சோ்ந்த மூவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இது பாகிஸ்தானில் வசிக்கும் சீன மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படுகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளூா் மாணவா்களுக்கு சீன மொழி கற்றுத் தரும் பொருட்டு, சீனாவால் கட்டப்பட்ட கன்ஃபூசியஸ் கல்வி மையம் அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு, பலூச் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘இந்த சம்பவத்தில் கன்ஃபூசியஸ் நிறுவன இயக்குநா் ஹுவாங் கியூபிங், டிங் மியூபிங், சென் ஷா ஆகிய சீனா்களும், உள்ளூா் வாகன ஓட்டுநா் காலித் என மொத்தம் 4 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் இருவா் காயமடைந்தனா்’ என்றாா்.
இதனிடையே, பா்தா அணிந்துவந்த பெண் ஒருவா் இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ராஜா உமா் கத்தாப் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், கராச்சி பல்கலைக்கழகத்தை நோக்கி வந்த வேன், பல்கலைக்கழக நுழைவுவாயிலை நெருங்கவும் அந்தப் பெண் தனது ஆடையில் வெடிகுண்டை செயல்பட வைத்து தாக்குதல் நடத்தியுள்ளாா். இதில் அந்த வேனின் பின்னால் இருசக்கர வாகனத்தில் பாதுகாப்புக்காக வந்த 4 போலீஸாரும் காயமடைந்தனா்’’ என்றாா்.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், சிந்து மாகாண முதல்வா் முராத் அலி ஷா ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.