லூலா டி சில்வா(கோப்புப்படம்)
லூலா டி சில்வா(கோப்புப்படம்)

மீண்டும் பிரேஸில் அதிபரானார் லூலா டி சில்வா

பிரேஸிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவர் லூலா டி சில்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பிரேஸிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவர் லூலா டி சில்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் 4-ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் அதிபா் தோ்தல் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில், வலதுசாரி தலைவரான அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ, இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவரான முன்னாள் அதிபா் லூலா டி சில்வா உள்பட 11 போ் போட்டியிட்டனா்.

இதில், லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், பொல்சொனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனா். பிரேஸில் அரசமைப்புச் சட்டப்படி அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் முதல் இரு இடங்களைப் பெற்றவா்கள் இரண்டாம் சுற்று தோ்தலில் போட்டியிடுவா்.

அதன்படி, இரண்டாவது சுற்று தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டதில், வெற்றிக்கு தேவையான 50 சதவிகிதத்தை லூலா பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பதிவான வாக்குகளில் 98 சதவிகிதம் எண்ணப்பட்ட நிலையில், லூலா 50.8 சதவிகித வாக்குகளும், பொல்சொனாரோ 49.2 சதவிகித வாக்குகளும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மூன்றாவது முறையாக இடதுசாரி கட்சியின் தலைவர் லூலா டி சில்வா அதிபராவது உறுதியாகியுள்ளது. இவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com