சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் மீது சிரியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் வான் படைகள், சிரியா மீது மீண்டும் தாக்குதலை நிகழ்த்தியுள்ளன.
இஸ்ரேல் - காஸா போர்
இஸ்ரேல் - காஸா போர்


இஸ்ரேல் மீது சிரியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் வான் படைகள், சிரியா மீது மீண்டும் தாக்குதலை நிகழ்த்தியுள்ளன.

இஸ்ரேல் நாட்டின் வான் படைகள் நடத்திய தாக்குதலில் சிரியா நாட்டில் உள்ள அலப்போ விமான நிலையத்தின் ஓடுதளம் சேதமடைந்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று, சிரியாவில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியிருந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில் மீண்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியா நாட்டின் விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் படையினர், தொடர்ந்து நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கோலன் குன்றுகளுக்கு அருகில் முகாமிட்டிருக்கும் இஸ்ரேல் படையினர் மீது, சிரியாவிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக புதன்கிழமை காலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை சிரியா ராணுவ முகாம்களைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இந்த தாக்குதலில், சிரியா நாட்டு ராணுவ வீரர்கள் 8 பேர் பலியானதாகவும் 7பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஒருபக்கம் காஸா பகுதியில் தனது குண்டுவீச்சை இஸ்ரேல் ராணுவம்  தீவிரப்படுத்தியுள்ளது. தரைவழித் தாக்குதலையும் அதிகரிக்க திட்டம் தீட்டி வருகிறது. காஸா பகுதிக்குள் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை எப்போது  வேண்டுமானாலும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், போர் தொடங்கி 19வது நாளான இன்று விமானத் தாக்குதலை ராணுவம்  அதிகரித்துள்ளது. கட்டடங்கள் பலவும் இடிபாடுகளாக மாறியுள்ளன.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய பிறகு அந்த அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் தொடங்கி இன்று 19 நாள்கள் ஆகின்றன.

ஹமாஸ் அமைப்பைக் குறிவைத்து காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், அதன் குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

வான்வழித் தாக்குதல் மட்டுமின்றி, காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாக உள்ளது.

இந்தச் சூழலில், தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக காஸா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் குண்டுவீச்சை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த 7-ஆம் தேதி 5 ஆயிரம் ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.

அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய சுமார் 1,000 ஹமாஸ் படையினர், அங்கிருந்த 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும், ராணுவத்தினரையும் படுகொலை செய்தனர். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 18 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி  சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸூடனான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அந்த நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார்.

அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசிய மேக்ரான், காஸாவில் அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com