சாலையை முடக்கிய விவசாயிகள் | AFP
சாலையை முடக்கிய விவசாயிகள் | AFP

வலுப்பெறும் பிரான்ஸ் விவசாயிகளின் போராட்டம்! காரணம் என்ன?

பிரான்ஸில் நடக்கும் தொடர் விவசாயிகள் போராட்டங்கள் எதைக் கேட்கின்றன! 

பிரான்ஸ் நாட்டின் விவசாயிகள் போராட்டம் காட்டுத்தீ போல நாடெங்கும் பரவியுள்ளது. நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் தங்களது டிராக்டர்களை வரிசையாக நிறுத்தி பெரும் போக்குவரத்து பாதிப்பை உண்டாக்கியுள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு முன்னால் டயர்களைக் கொட்டியுள்ளனர். தொடர்ந்து தெருக்களில் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.   

இந்தப் போராட்டம் கிளம்பியது எதனால்? 

ஐரோப்பாவின் மிகப்பெரிய விவசாய உற்பத்தியாளரான பிரான்ஸின் விவசாயிகள் தங்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டுப்பாடுகள் தங்கள் கழுத்தை மேலும் நெரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், உள்நாட்டு விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் வகையில் குறைந்த விலையில் கிடைக்கும் வெளிநாட்டு இறக்குமதிகளை அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்ட முழக்கங்களில் கேட்கின்றன. 

உக்ரைனின் அளவற்ற ஏற்றுமதி தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனின் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு வரி விலக்கு அளித்தது, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நிலையை பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ரஷியாவின் தாக்குதல்களை எதிர்கொண்டுவரும் உக்ரைனின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த வரிவிலக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பிரச்னைகளை பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து உற்பத்தியாளர்களும் சந்திக்கிறார்கள். இதுபோன்ற பல பிரச்னைகளையும், அரசு அளவு மீறி அதிகாரம் செலுத்துவதாக எழும் அதிருப்திகளுமே இந்த மிகப்பெரிய போராட்டத்திற்கு எரிபொருளாகியுள்ளது. 

கடந்த செவ்வாய் கிழமை பெமியர்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்திற்குள் அத்துமீறிய கார், 36 வயதான பெண் விவசாயியையும், அவரது 16 வயது மகளையும் பலி கொண்டது. நாடு முழுதும் இந்த இழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த தினம் முதல் நாட்டின் முக்கிய சாலைகள் அனைத்தும் விவசாய டிராக்டர்கள் அணிவகுப்பால் ஸ்தம்பித்து நிற்கின்றன. 

புருசேல் பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரெஞ்சு கிராமப்புற விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம், அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கும் உற்பத்தியாளர்களின் குறைவான ஊதியத்திற்கும் எதிரான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.  

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாமல் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். 

மேலும், பிரான்சிற்கு பொது விவசாயக் கொள்கையின் கீழ் ஒரு வருடத்திற்கு மட்டும் 9.8 பில்லியன் டாலர்கள் மானியமாகக் கிடைக்கிறது. மற்ற உறுப்பு நாடுகளை விட பிரான்ஸ் அதிகமான மானியத்தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பேசிய அரசு செய்தித் தொடர்பாளர் பிரிஸ்கா தெவ்னாட் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய  முன்மொழிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எளிதான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும், 'அரசு தனது விவசாயக் கொள்கைகளில் திடமாக உள்ளது. விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும், அவர்களது வாழ்க்கையை எளிதாக்கவும், புதிய சுற்றுச் சூழல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அரசு துணை நிற்கும்' என அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

'இந்தப் போராட்டம் சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளில் நடப்பதால் அரசு காவல்துறை மூலம் சாலைத்தடுப்புகளை நீக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளை எதிர்த்து ஜெர்மனி, நெதர்லாந்து, ரொமானியா ஆகிய இடங்களிலும் விவசாயிகள் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் கொண்ட அறிக்கையை வெளியிடவிருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com