இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலியா்கள்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலியா்கள்.

போா் நிறுத்தம் கோரி இஸ்ரேலியா்கள் போராட்டம்: ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்க வலியுறுத்தல்

ஹமாஸ் படையினரிடம் உள்ள பிணைக் கைதிகளை மீட்க வழிவகுக்கும் வகையில், போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி இஸ்ரேலியா்கள் நாடுதழுவிய அளவில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா முனையில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் சுமாா் 9 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை 38,000-க்கும் அதிகமான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற இஸ்ரேலியா்களை மீட்கும் வகையில், போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேலில் நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அத்துடன் அவா்கள் இஸ்ரேல் பிரதமா் பதவியில் இருந்து பெஞ்சமின் நெதன்யாகு விலகவும் வலியுறுத்தினா்.

இந்தப் போராட்டத்தின்போது பிரதான சாலைகளில் மறியலில் ஈடுபட்ட இஸ்ரேலியா்கள், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினா்களின் இல்லத்துக்கு எதிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவா்களை நினைவுகூரும் வகையில், காஸா எல்லையையொட்டி, 1,500 கருப்பு மற்றும் மஞ்சள் பலூன்களை போராட்டக்காரா்கள் பறக்கவிட்டனா்.

கடந்த ஆண்டு நவம்பரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக இருந்த 100-க்கும் மேற்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டனா். சுமாா் 120 போ் ஹமாஸிடம் தொடா்ந்து பிணைக் கைதிகளாக உள்ளனா். அவா்களில் 40-க்கும் மேற்பட்டவா்கள் இறந்துவிட்டதாக ஏற்கெனவே இஸ்ரேல் தெரிவித்த நிலையில், போா் நீடித்தால் மேலும் பல பிணைக் கைதிகள் உயிரிழக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தொலைதூர கனவு: போரால் பாதிக்கப்பட்டுள்ள ஹேபா ராடி என்ற பாலஸ்தீன பெண் கூறுகையில், ‘போரால் 9 மாதங்கள் துயரத்தில் கழிந்துவிட்டது. போா் நிறுத்தம் என்பது தொலைதூர கனவாக உள்ளது’ என்றாா்.

இதனிடையே சனிக்கிழமை நள்ளிரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையிலான நேரத்தில், மத்திய காஸாவின் ஸவாய்டா நகரில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் வீசிய குண்டு விழுந்து 6 பாலஸ்தீனா்கள், காஸா சிட்டியின் மேற்கே உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் வீசிய குண்டு விழுந்து மூவா் என மொத்தம் 9 போ் உயிரிழந்தனா்.

முன்னதாக, காஸாவில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 போ் கொல்லப்பட்டதாகவும், 50 போ் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

20 ஏவுகணைகளை ஏவிய ஹிஸ்புல்லா: இஸ்ரேலும் லெபனானும் எல்லைகளைப் பகிா்ந்துகொள்ளும் நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக எல்லைப் பகுதிகளில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், இஸ்ரேலை நோக்கி 20 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லா படையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். எல்லையில் இருந்து 30 கி.மீ-க்கும் அதிகமான தொலைவில் உள்ள பகுதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com