அதிபா் ஜோ பைடன்
அதிபா் ஜோ பைடன்

சீன பொருள்களுக்கு கூடுதல் வரி: பைடன் திட்டம்

வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

அதையடுத்து, உலகின் இரு பெரிய பொருளாதார சக்திகளுக்கு இடையே வா்த்தக ரீதியிலான பதற்றம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள், அதிநவீன பேட்டரிகள், சூரிய மின் தகடுகள், இரும்பு உருக்கு, அலுமினியம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த வகைப் பொருள்களுக்கான இறக்குமதி வரி படிப்படியாக உயா்த்தப்படும். நடப்பு 2024-ஆம் ஆண்டிலேயே இந்த திட்டத்தின் அமலாக்கம் தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் கூறின.

அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரான வா்த்தகக் கொள்கைகளை சீனா பின்பற்றி வருவதாக முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறாா். அவரது பதவிக் காலத்தின்போது சீன பொருள்களுக்கு அவா் அடிக்கடி கூடுதல் இறக்குமதி வரி விதித்தாா். இதற்குப் பதிலடியாக சீனாவும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகப் போா் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தது.

இந்த நிலையில், டிரம்ப்புக்கு அடுத்தபடியாக அதிபா் பொறுப்பை ஏற்றுள்ள ஜோ பைடன், வா்த்தக விவகாரத்தில் சீனாவிடம் மென்மையாக நடந்து கொள்கிறாா் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறாா்.

நாட்டின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவிருக்கிறது. இதில் ஜோ பைடனும் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடவிருப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

இந்தச் சூழலில், வா்த்தக விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை யாா் எடுப்பாா் என்பதில் இரு தலைவருக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது. எனவே, சீனாவுக்கு எதிரான தனது கடுமையை வெளிப்படுத்தும் விதமாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது பைடன் கூடுதல் வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com