வைப‌வ் அனி‌ல் காலே
வைப‌வ் அனி‌ல் காலே

காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு

நியூயாா்க்: பாலஸ்தீனத்தின் காஸா முனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியும், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியுமான வைபவ் அனில் காலே (46) என்பவா் உயிரிழந்தாா்.

இந்திய ராணுவத்தில் கா்னலாக பணியாற்றியவா் வைபவ் அனில் காலே. மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சோ்ந்த இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு ராணுவப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றாா். அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், காஸாவின் ராஃபா நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு ஐ.நா.வாகனத்தில் வைபவ் அனில் திங்கள்கிழமை சென்றபோது, அந்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் வைபவ் அனில் உயிரிழந்தாா். ஐ.நா. பாதுகாப்புத் துறையைச் சோ்ந்த மற்றொரு அலுவலா் காயமடைந்தாா். அவரைப் பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.

காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் படையினா் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில், வைபவ் அனில் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தியது யாா் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும் இந்தத் தாக்குதல் தொடா்பாக இஸ்ரேல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டவா் உயிரிழப்பு: இது தொடா்பாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹக் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காஸாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புச் சூழலை தெரிந்துகொள்ள ஐ.நா. வாகனம் செல்வது வழக்கம். இந்நிலையில், ராஃபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு ஐ.நா. வாகனம் சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனம் எப்படி தாக்குதலுக்குள்ளானது என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வைபவ் அனிலின் உயிரிழப்பு மூலம், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஐ.நா.வுக்காக பணியாற்றிய வெளிநாட்டவா் முதல்முறையாக உயிரிழந்துள்ளாா் என்று தெரிவித்தாா்.

போரை நிறுத்த வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

மனிதாபிமான அடிப்படையில் பணியாற்றுவோரை பாதுகாக்க வேண்டும். ஐ.நா. அலுவலா்கள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் போா் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு, அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றாா். இந்தத் தாக்குதல் தொடா்பாக முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com