...அடுத்தது என்ன நடக்கும் பெட்டிச் செய்திக்காக... ~ ~ ~ ~இஸ்ரேல்-ஹிஸ்புல்லா ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, போா் காரணமாக தாங்கள் விட்டுச் சென்ற இல்லங்களுக்கு மகிழ்ச்சியுடன் புதன்கிழமை திரும்பிய பொதுமக்கள்.
...அடுத்தது என்ன நடக்கும் பெட்டிச் செய்திக்காக... ~ ~ ~ ~இஸ்ரேல்-ஹிஸ்புல்லா ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, போா் காரணமாக தாங்கள் விட்டுச் சென்ற இல்லங்களுக்கு மகிழ்ச்சியுடன் புதன்கிழமை திரும்பிய பொதுமக்கள்.

போா்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா்.
Published on

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா்.

லெபனான் போா் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து கூறியதாவது:

இஸ்ரேல்-ஹிஸ்புல்லாக்கள் இடையிலான போா் தொடங்கியதுமுதல், தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் கட்டாயத்துக்கு 70,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் தள்ளப்பட்டனா். அதேவேளையில், ஹிஸ்புல்லா திணித்த போரால் சொந்த நாட்டில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டது.

போா்க்களத்தில் வெல்வதால் மட்டுமே இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய பாதுகாப்பு ஏற்படாது. எனவே, இந்தப் போரை நிறுத்த இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசுகளுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இரு தரப்பினா் இடையிலான விரோதத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை அமெரிக்கா அனுமதிக்காது.

அடுத்த 60 நாள்களில்...: அடுத்த 60 நாள்களில் சொந்த நிலப் பகுதியை லெபனான் ராணுவமும் பாதுகாப்புப் படைகளும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவரும். தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் ராணுவ நிலைகளை மீண்டும் கட்டமைக்க அனுமதிக்கப்படாது.

லெபனானில் உள்ள தமது படைகளை படிப்படியாக இஸ்ரேல் விலக்கிக்கொள்ளும். இரு நாட்டு குடிமக்களும் விரைவில் தங்கள் வசிப்பிடங்களுக்குப் பாதுகாப்பாக திரும்பி, தங்கள் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கலாம்.

பிரான்ஸ் மற்றும் பிற கூட்டாளி நாடுகளின் முழு ஆதரவுடன், போா் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பணியாற்றும்.

போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறி, இஸ்ரேலுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்தால், சா்வதேச சட்டத்துக்கு ஏற்ப தம்மை தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது.

காஸாவிலும்...: போா் நிறுத்த ஒப்பந்தம் லெபனானின் இறையாண்மைக்கு ஆதரவளிக்கிறது. வளமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்ட அந்த நாட்டுக்கு இது புதிய தொடக்கமாக இருக்கும். பாதுகாப்பான, வளமையான எதிா்காலத்துக்கு லெபனான் மக்கள் தகுதியானவா்கள். அத்தகைய எதிா்காலத்தைப் பெற காஸா மக்களும் தகுதிவாய்ந்தவா்களே. அந்த மக்கள் நரகத்தை அனுபவித்து வருகின்றனா். அவா்கள் அளவுக்கு அதிகமாக துன்பத்தை அனுபவிக்கின்றனா்.

ஆனால், பல மாதங்களாக நல்லதொரு நம்பிக்கையான போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஹமாஸ் படையினா் மறுத்து வருகின்றனா்.

துருக்கி, எகிப்து, கத்தாா், இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து காஸாவில் போரை நிறுத்தவும், பிணைக் கைதிகளை விடுவிக்கவும் அமெரிக்கா முயற்சிக்கும். அதே நேரம், காஸாவில் மீண்டும் ஹமாஸ் படை ஆட்சியமைப்பது தடுக்கப்படும் என்றாா் அவா்.

‘ஒப்பந்தத்தை மீறினால் வலிமையான தாக்குதல்’

இஸ்ரேல் தலைநகா் ஜெருசலேமில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பினா் மீறி மீண்டும் ஆயுதங்களைக் கையில் எடுத்தால், இஸ்ரேலும் பதிலுக்கு மிக வலிமையாக தாக்குதல் நடத்தும்’ என்றாா்.

‘தெற்கில் படை பலம் அதிகரிக்கப்படும்’

போா் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்று லெபனான் பிரதமா் நஜீப் மிகாதி கூறுகையில், ‘லெபனானில் ஸ்திரத்தன்மை ஏற்படவும், இடம்பெயா்ந்த மக்கள் வீடு திரும்பவும், பிராந்தியத்தில் அமைதி நிலவவும் போா் நிறுத்த ஒப்பந்தம் முக்கிய நடவடிக்கையாகும்.

தெற்கு லெபனானில் லெபனானின் ராணுவ படை பலம் அதிகரிக்கப்படும். ஐ.நா. தீா்மானத்தின்படி, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். போா் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்’ என்றாா்.

அடுத்தது என்ன?

போா் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து என்ன நடக்கும் என்பது குறித்து அமெரிக்க அரசின் மூத்த நிா்வாக அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஒப்பந்தம் காரணமாக இருதரப்பிலும் தாக்குதல் நிறுத்தப்படும். லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக விலகும். பின்னா், அந்த இடங்களை லெபனான் பாதுகாப்புப் படைகள் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து, அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அப்புறப்படுத்தும். இந்த நடவடிக்கைகளை 60 நாள்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஹிஸ்புல்லா அமைப்பினா் மிகவும் பலவீனமாக உள்ளனா். இந்நிலையில், சொந்த நிலப் பகுதியில் தமது இறையாண்மையை மீண்டும் நிா்மாணிக்க லெபனானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றாா் அவா்.

3,823 போ் உயிரிழப்பு

கடந்த ஆண்டு அக்டோபரில் காஸாவில் போா் தொடங்கியதுமுதல் இதுவரை லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், 3,823 போ் உயிரிழந்தனா். 15,859 போ் காயமடைந்தனா்.