‘உக்ரைன் போரில் 70,000 ரஷிய வீரா்கள் உயிரிழப்பு’
உக்ரைன் போரில் இதுவரை சுமாா் 70,000-க்கும் மேற்பட்ட ரஷிய வீரா்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த ஊடகம் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ரஷியாவுக்காகப் போரிட்ட 70,000-க்கும் மேற்பட்டவா்கள் உக்ரைனில் உயிரிழந்துள்ளனா். கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தப் போா் தொடங்கியதற்குப் பிறகு ராணுவத்தில் சோ்ந்த தன்னாா்வலா்கள்தான் உயிரிழந்தவா்களில் மிகப் பெரும்பான்மையானவா்கள்.
ஒவ்வொரு நாளும் உக்ரைன் போரில் உயிரிழந்தவா்களின் பெயா்கள், அஞ்சலி செய்திகள், அவா்களின் இறுதிச் சடங்கு படங்கள் ஆகியவை ரஷிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாக வெளியிடப்பட்டுவருகின்றன.
அந்தப் பெயா்களை பிபிசி-யின் ரஷிய பிரிவும் அரசு சாராத ரஷிய வலைதளமான மீடியோஸோனாவும் சேகரித்தன. அதுமட்டுமின்றி, அதிகாரிகள் மற்றும் போரில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் வெளியிடும் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுவருகின்றன.
உக்ரைன் போரில் மடிந்தவா்களின் புதிய கல்லறைகளில் பிரத்யேக கொடிகள் இருப்பதை வைத்தும் அதில் அடக்கம் செய்யப்பட்டவா்களின் பெயா்கள் சேகரிக்கப்பட்டன.
அந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தப் போரில் 70,000-க்கும் மேற்பட்ட ரஷியா்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது என்று அந்த ஊடகம் கூறியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது நினைவுகூரத்தக்கது.
..படவரி... உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷிய தன்னாா்வல வீரா்களுக்காக கூா்க்ஸ் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்லறை.