

அமெரிக்காவில் செப்பு உலோகத்தின் விலை கடுமையாக உயர்வை அடைந்ததன் காரணமாக, அங்கு செப்புக் கம்பிகளை வெட்டி திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
செப்புக் கம்பிகளைத் திருடும் திருடர்கள், கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி, மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களையும், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் மீது ஏறி இணையதள மற்றும் செல்போன் இணைப்புக் கம்பிகளையும் வெட்டித் திருடி, வெளியே கடையில் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
தற்போது, அமெரிக்காவில், லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரம்தான் செப்புக் கம்பிகளின் திருட்டில் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. செப்புக் கம்பிகள் திருட்டுச் சம்பவங்களால் தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள்தான் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன.
ஆனால், செப்புக் கம்பி திருட்டுச் சம்பவங்கள் கண்டறியும் நிபுணர்கள் அமெரிக்காவில் குறைவு என்பதால், இது குறித்து புகார்கள் வரப்பெற்றாலும் விசாரணை நடத்தி முடிக்க கால தாமதம் ஆவது குறித்தும் கவலை எழுந்துள்ளது.
இது குறித்து சட்டத் துறை நிபுணர்கள் கூறுகையில், இது வளர்ந்து வரும் ஒரு பேரிடர், இதனை சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்துவது என்பது பூனை - எலி விளையாட்டு போலத்தான் என்கிறார்கள்.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 9770 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆறு மாத காலத்தில மிகவும் அதிகம் என்றும், இந்த செப்புக் கம்பி திருட்டினால் சுமார் 80 லட்சம் பேர் தொலைத்தொடர்புகளை இழந்து பாதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.600 கோடிக்கு மேல் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, சரி செய்து, புதிய கம்பிகளை வாங்கிப் பொருத்துவதற்கு ஆன செலவு மட்டுமே இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்புக் கம்பியின் தேவை, கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக அதிகரித்து வருகிறது. மின்னணு ஒயர்கள், காற்றாலைகள், மின் வாகனங்கள், செய்யறிவுக்கான தகவல் மையங்கள் அதிகரிப்பு, நேரடியாக செப்புக் கம்பிகளின் தேவையை அதிகரித்துவிட்டன.
உள்ளூரில், பழைய பொருள்களை வாங்கும் வணிகர்கள், குறைந்த விலையில் செப்புக் கம்பிகளை வாங்கி அதனை உலோகத்தை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பெரிய விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இங்கு அது மீண்டும் புதிய செப்புக் கம்பிகளாக மாறி வெளியே வருகின்றன.
நாடு முழுவதும், செப்புக் கம்பி திருடர்கள், வீட்டின் குளிர்சாதன வசதிகளை இணைத்திருக்கும் செப்புக் கம்பிகள், சாலை விளக்குகளுக்கான இணைப்புகள், தனியார் நிறுவனங்களை இரவில் மூடிச் சென்ற பிறகு மின்னணு ஒயர்களை வெட்டி திருடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்கா முழுவதும் செப்பு உலோகத்தின் விலை உயர்ந்ததால், மின்கம்பிகளில் இருந்து செம்பு திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைகளை பாதித்து, இணையம், தொலைபேசி, பாதுகாப்பு கேமராக்கள் போன்றவை முடங்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
செப்புக் கம்பிகளை திருடும் திருடர்கள், வெட்டும் கருவிகள் போன்றவற்றை பயன்படுத்தி இரவு நேரங்களில் மின் கம்பி அல்லது தொலைத்தொடர்பு கம்பிகளை வெட்டி செம்புக் கம்பியை எடுத்து விடுகின்றனர்.
இந்த திருட்டுகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சீரமைப்பு செலவையும்,தற்காலிகமாக சேவை வழங்குவதில் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
சில பழைய பொருள்களை வாங்கும் கடைகள் கொடுத்த துப்புகளைக் கொண்டு இதுவரை 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, சில தொலைத் தொடர்பு நிறுவனங்களில், செப்புக் கம்பிகளில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி வருகின்றன. இதன் மூலம் செப்புக் கம்பி திருடப்பட்டாலும் அது எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்பு, மின் கம்பிகளுக்கு தற்போது வேலிகளைக் கொண்டு பாதுகாக்கும் முயற்சியிலும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மின் கம்பிகள் மீது ஏற முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. சில நிறுவனங்கள், மின் கம்பிகளைத் திருடுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.
பழைய பொருள்களை வாங்கும் கடைகளிலும், திருட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல, இவர்களை இணைத்த தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட செப்புக் கம்பிகளின் விவரங்கள் அந்த தகவல் மையத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. இனி, இதனடன் இணைந்த பழைய பொருள்களை வாங்குவோர் செப்புக் கம்பிகளின் விவரங்களை சரிபார்த்து வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.