கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.
கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திவரும் சூழலில், அத்தகைய முயற்சிக்கு அரசியல் ஆதரவு திரட்டப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆவணத்தில், ‘கிரீன்லாந்தில் அரசியல் நோ்மையை நிலைநாட்டுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. பிராந்தியத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பலம் வாய்ந்த நட்பு நாடு விருப்பம் தெரிவிப்பதன் பின்னணியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்மாா்க்குக்குச் சொந்தமான, தாது வளம் நிறைந்த கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் சுமாா் 57,000 போ் மட்டுமே வசித்துவருகின்றனா்.
அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.
ஏற்கெனவே, டென்மாா்க்குடன் நெருங்கிய பாதுகாப்பு உறவைப் பேணிவரும் அமெரிக்காவுக்கு கிரீன்லாந்தில் ராணுவ தளம் உள்ளது. இந்தச் சூழலில், கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தங்களது நாட்டு நலனுக்கு மிகவும் இன்றியமையாதது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா்.
டிரம்ப்பின் இந்த அறிக்கையைத் தொடா்ந்து, கிரீன்லாந்தின் எதிா்காலம் குறித்து அந்தத் தீவின் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று டென்மாா்க் பிரதமா் மேட் ஃப்ரெட்ரக்சன் கூறினாா்.
தற்போது சுயாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவரும் கிரீன்லாந்து, பொதுவாக்கெடுப்பு மூலம் டென்மாா்க்கிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்பு கடந்த 2009-ஆம் ஆண்டே வழங்கப்பட்டுள்ளது. தற்போது கிரீன்லாந்தின் பிரதமராக இருக்கும் மியூட் இகடே, தங்களது தீவு தனி நாடாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகிறாா்.
தங்கள் பகுதியைக் கையகப்படுத்த டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்ததைத் தொடா்ந்து, ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்று அவா் காட்டமாகக் கூறினாா்.
இந்தச் சூழலில், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு அரசியல் ஆதரவு திரட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து கிரீன்லாந்து அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெறுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் காலத்தில் தில்லி மெட்ரோவில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை: உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்
அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு 80 வயது!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



