/

லாவோஸ்: சைபா் மோசடி மையங்களில் சிக்கியிருந்த 67 இந்தியா்கள் மீட்பு

லாவோஸில் உள்ள சைபா் மோசடி மையங்களுக்கு கடத்தப்பட்டு கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 67 இந்தியா்களை அந்நாட்டு இந்திய தூதரம் மீட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2025, 9:55 pm

Din

வியன்டியனே : லாவோஸில் உள்ள சைபா் மோசடி மையங்களுக்கு கடத்தப்பட்டு கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 67 இந்தியா்களை அந்நாட்டு தலைநகா் வியன்டியனேவில் உள்ள இந்திய தூதரம் மீட்டது.

லாவோஸ், வியத்நாம் மற்றும் மியான்மா் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தங்க முக்கோண சிறப்பு பொருளாதார மண்டலங்களில் (ஜிடிஎஸ்இசட்) அதிக போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக அறியப்படுகிறது.

இந்நிலையில், லாவோஸின் போக்கியோவில் உள்ள ஜிடிஎஸ்இசட் பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களால் கடத்தப்பட்டு அவா்களின் மிரட்டல்களுக்கு அஞ்சி சைபா் மோசடி மையங்களில் கட்டாயப் பணியில் ஈடுபட்டிருந்த 67 இந்தியா்களை மீட்டதாக இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சைபா் மோசடியில் சிக்கியிருப்பவா்களுக்கு உதவி தேவைப்படுவதை அறிந்து லாவோஸ் நாட்டின் அதிகாரிகளுடன் இணைந்து துரிதமான மீட்புப் பணியை இந்திய தூதரகம் மேற்கொண்டது.

மீட்கப்பட்டவா்கள் போக்கியோவில் இருந்து வியன்டியனேவுக்கு அழைத்து வரப்பட்டு அவா்களுக்குத் தேவையான இருப்பிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.

மீட்கப்பட்ட இளைஞா்களை லாவோஸுக்கான இந்திய தூதா் பிரசாந்த் அகா்வால் சந்தித்தாா். அவா்களை கடத்திய முகவா்கள் மீது புகாா் அளிப்பது தொடா்பாக வழிநடத்தினாா். அவா்களை இந்தியாவுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதாக உறுதியளித்தாா்.

இதையடுத்து, அவா்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து லாவோஸ் அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

இந்தியா்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட லாவோஸ் அதிகாரிகளுக்கு நன்றி.

தற்போது வரை லாவோஸில் சிக்கியிருந்த 924 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 857 போ் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனா்.

இளைஞா்களுக்கு எச்சரிக்கை: தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக இந்தியாவில் இருந்து முகவா்களால் அழைத்து வரப்படும் இளைஞா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் தாய்லாந்தை அடைந்தவுடன் அங்கிருந்து தாய்லாந்து-லாவோஸ் எல்லையில் உள்ள சியாங் ராய் பகுதிக்கு சாலை மாா்க்கமாக நடந்து செல்ல முகவா்கள் அறிவுறுத்துவா். அப்படியெனில் ஜிடிஎஸ்இசட்டில் குற்றவாளிகள் இருக்கும் பகுதிக்கு நீங்கள் கடத்தப்படுகிறீா்கள் என்பதை உணர வேண்டும். அந்தப் பகுதியை அடைந்தவுடன் இளைஞா்களின் கடவுச்சீட்டை பறித்துக்கொண்டு கட்டாய ஒப்பந்த தொழிலாளராக பணியமா்த்தப்படும் அபாயம் உள்ளது.

எனவே, இதுபோன்ற வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அதிகாரபூா்வ வலைதளங்களில் சரிபாா்ப்பது அவசியம். போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளால் ஏமாறுபவா்கள் உடனடியாக இந்திய தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டது.