
நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய போராட்டம் கலவரமாக வெடித்து, பிரதமர் ராஜிநாமா செய்த நிலையில், நாட்டின் முக்கிய விமான நிலையமான காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டது.
காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், ஏராளமான இந்திய விமானங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
நேபாளத்துக்கு இந்தியாவிலிருந்து புறப்பட வேண்டிய பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காத்மாண்டு விமான நிலையத்துக்கு அருகே கலவரக்காரர்களால் தீவைக்கப்பட்ட கட்டடங்களிலிருந்து தீ பரவி வானம் முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுவதால், விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளிலிருந்து நேபாளம் வந்த விமானங்கள் அண்டை நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் திங்கள்கிழமை இளைஞர்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.
தில்லியிலிருந்தும் மும்பையிலிருந்தும் சென்ற இண்டிகோ விமானங்கள், வெகு நேரம் தரையிறங்க அனுமதி கிடைக்காமல், லக்னௌ விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டம், இன்று அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. பிரதரை பதவி விலகக் கோரி தொடர்ந்து போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், நேபாள நாடாளுமன்றத்துக்கும் பிரதமர் இல்லத்துக்கும் தீ வைத்ததால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நேபாள பிரதமராக இருந்த சர்மா ஓலி, நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.