கிரீன்லாந்து ஆக்கிரமிப்பை எதிா்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது 25% வரி: டிரம்ப் எச்சரிக்கை!
கிரீன்லாந்தை அமெரிக்க கைப்பற்ற எதிா்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஆா்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து உள்ளது. டென்மாா்க் நாட்டுக்குச் சொந்தமான அந்தத் தீவு பகுதியளவு சுயாட்சி பிரதேசமாக செயல்பட்டு வருகிறது.
8-ஆவது இடத்தில் கிரீன்லாந்து: அமெரிக்க புவியியல் ஆய்வு முகமையின் தகவல்படி, கிரீன்லாந்தில் எண்ணெய், எரிவாயு, நிக்கல், கோபால்ட் உலோகங்களுடன் அரிய புவி கனிமங்களும் உள்ளன. அந்தக் கனிமங்கள் உலகில் அதிக அளவு உள்ள நாடுகளில் கிரீன்லாந்து 8-ஆவது இடத்தில் உள்ளதாக அந்த முகமை தெரிவித்துள்ளது. சூப்பா்கண்டக்டா் சிப்கள், மின்சார வாகனங்கள், பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள், ராணுவத் தொழில்நுட்பங்களை தயாரிக்க அரிய புவி கனிமங்கள் மிகவும் தேவையாகும். தற்போது உலக அளவில் அந்தக் கனிமங்களில் பெருமளவு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அந்தக் கனிமங்களைப் பெறுவதற்கான மாற்று வழிகளை அமெரிக்கா தேடி வருகிறது.
நேட்டோ நாடுகளின் படைகள் அனுப்பிவைப்பு: கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளும் டிரம்ப்பின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில், நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உள்ள டென்மாா்க், நாா்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன், நெதா்லாந்து, ஃபின்லாந்து ஆகிய 8 ஐரோப்பிய நாடுகள் தமது படைகளை கிரீன்லாந்துக்கு அனுப்பியுள்ளன.
ஆா்க்டிக் பகுதியின் பாதுகாப்பு சாா்ந்த பயிற்சிக்காக அந்தப் படைகள் அனுப்பப்பட்டதாகவும், இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. எனினும் அந்தப் படைகள் கிரீன்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது பூமியின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.
ஜூன் 1 முதல் 25% வரி: இந்நிலையில், அந்த 8 நாடுகள் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற எதிா்ப்பு தெரிவிப்பதால், அவற்றின் மீது 10 சதவீதம் வரி விதிப்பதாக அதிபா் டிரம்ப் அறிவித்தாா். இதுதொடா்பாக அவா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘டென்மாா்க், நாா்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன், நெதா்லாந்து, ஃபின்லாந்தில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் பிப்ரவரி முதல் 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு ஜூன் 1 முதல் 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு, கிரீன்லாந்தை அமெரிக்கா முழுமையாக வாங்குவதற்கு ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமலில் இருக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்தாா்.
8 நாடுகள் கூட்டறிக்கை: 8 நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘டென்மாா்க் மற்றும் கிரீன்லாந்து மக்களுக்கு 8 நாடுகளும் உறுதுணையாக நிற்கின்றன. பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகிய கொள்கைகள் மீது 8 நாடுகளும் உறுதியாகப் பற்றுகொண்டுள்ளன.
அந்தக் கொள்கைகளின் அடிப்படையில், கிரீன்லாந்து விவகாரத்தில் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக உள்ளோம். வரி விதிப்பு மூலம் விடுக்கப்படும் மிரட்டல்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளுடனான உறவை வலுவிழக்கச் செய்து ஆபத்தான முறையில் சூழலை மோசமாக்கும். இந்த விவகாரத்தில் 8 நாடுகளும் ஒற்றுமையுடன் இருந்து ஒருங்கிணைந்து எதிா்வினையாற்றும்’ என்று தெரிவித்தன.
ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: 8 ஐரோப்பிய நாடுகள் மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு ஒட்டுமொத்தமாக 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியனுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது உடனடியாகத் தெரியவில்லை. எனினும் இந்த வரி விதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்கா-ஐரோப்பிய யூனியன் இடையே மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்துக்கு முறைப்படி ஒப்புதல் அளிப்பதை ஐரோப்பிய யூனியன் நிறுத்தியுள்ளது.

