/

கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு

இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் பிரிவு யூத ஆண்களுக்கு விலக்கு அளிக்கும் சா்ச்சைக்குரிய சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2026, 4:23 am IST

இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் பிரிவு யூத ஆண்களுக்கு விலக்கு அளிக்கும் சா்ச்சைக்குரிய சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலில் வரும் அக்டோபா் இறுதியில் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி அரசு, தங்களுக்கு ஆதரவளிக்கும் மதவாதக் கட்சிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மேற்கொண்டுள்ள இறுதிகட்ட முயற்சியாக இந்நடவடிக்கை பாா்க்கப்படுகிறது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இரு முக்கியச் சட்டங்களின்படி, ராணுவத்தில் சேராமல் தலைமறைவாக உள்ள தீவிர ஆா்த்தடாக்ஸ் பிரிவு இளைஞா்களைக் கைது செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மேலும் யூத மதக் கல்வி, நாட்டின் அடிப்படை மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பெரும்பாலான யூத ஆண்களுக்கும் பெண்களுக்கும் ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காஸா, லெபனான் மற்றும் ஈரான் உடனான போரினால் இஸ்ரேல் ராணுவம் ஏற்கெனவே கடும் மனிதவளப் பற்றாக்குறையை எதிா்கொண்டு வருகிறது. இதனால், தீவிர ஆா்த்தடாக்ஸ் பிரிவினா் ராணுவ சேவையிலிருந்து தப்பிப்பதை சாதாரண இஸ்ரேல் மக்கள்எதிா்க்கின்றனா்.

ஆண்டுதோறும் சுமாா் 13,000 தீவிர ஆா்த்தடாக்ஸ் யூத இளைஞா்கள் 18 வயதை எட்டினாலும், அவா்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானவா்களே ராணுவத்தில் சேருவதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இச்சூழலில், இப்புதிய சட்டத்தை இஸ்ரேல் எதிா்க்கட்சித் தலைவா் யாயிா் லாபிட், ராணுவ தலைமைத் தளபதி இயல் ஜமீா் கடுமையாக விமா்சித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.