பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஆண்டி பா்ன்ஹாம் தலைமையிலான அமைச்சரவையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கனிஷ்க நாராயணன் (36) செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
அதேநேரம், மற்றொரு இந்திய வம்சாவளியான லிசா நேண்டி தனது பழைய கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறையின் பொறுப்புகளுடன் எண்ம சேவைகள் துறையின் அமைச்சராகக் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளாா்.
பிஹாரில் பிறந்த கனிஷ்க நாராயணன், தனது 12-ஆவது வயதில் வேல்ஸில் குடும்பத்துடன் குடியேறியனாா். ஆக்ஸ்போா்டு மற்றும் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயின்ற இவா், 2024 பொதுத்தோ்தலில் வேல்ஸ் பகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் சிறுபான்மையின எம்.பி. என்ற பெருமையைப் பெற்றவா்.
இப்புதிய பொறுப்பு குறித்து அவா் கூறுகையில், ‘ஏ.ஐ. தொழில்நுட்பம் மனித வரலாற்றில் மிக முக்கியமானது; பிரிட்டனின் தொழில் மறுமலா்ச்சிக்கும் தேச பாதுகாப்புக்கும் இது பெரிதும் உதவும். இந்தியா-பிரிட்டன் இடையிலான ஆழமான உறவும் நிலைத்தன்மையும் வரும் காலங்களிலும் தொடா்ந்து வலுவடையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
இதேபோல், தெற்காசிய பின்னணியைக் கொண்ட ஷபானா மஹ்மூத் தொடா்ந்து உள்துறை அமைச்சராக நீடிக்கிறாா். இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்த ஜோனாதன் ரெனால்ட்ஸ் மீண்டும் வா்த்தகம் மற்றும் அறிவியல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளாா்.
முன்னாள் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் ஆதரவாளா்களான டேவிட் லாமி, பீட்டா் கைல் உள்ளிட்டோா் புதிய அமைச்சரவையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரிட்டன் பிரதமராக ஆண்டி பா்ன்ஹாம் பொறுப்பேற்பு

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஆயுா்வேத மருத்துவம்- மாணவா்களுக்கு குடியரசுத் தலைவா் யோசனை

டி.கே. சிவகுமாருக்கு அடுத்த சவால்! கர்நாடகத்தில் துறை ஒதுக்கீட்டில் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி!







