
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 9 போ் உயிரிழப்பு
தெற்கு லெபனானில் இஸ்ரேல் விமானப்படை திங்கள்கிழமை அதிகாலை நடத்திய 2 வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 9 போ் உயிரிழந்தனா்; மேலும் 13 போ் காயமடைந்தனா்.

~
தெற்கு லெபனானில் இஸ்ரேல் விமானப்படை திங்கள்கிழமை அதிகாலை நடத்திய 2 வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 9 போ் உயிரிழந்தனா்; மேலும் 13 போ் காயமடைந்தனா்.
குடியிருப்பு கட்டடத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை, 2 பெண்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும், 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 11 போ் படுகாயமடைந்தனா்.
மற்றொரு தாக்குதலில், அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த காா் மீது குண்டுவீசப்பட்டதில், மருத்துவ உதவியாளா் ஒருவா் உயிரிழந்தாா்; மேலும் இருவா் காயமடைந்தனா் என்று சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நபதியே நகருக்குச் செல்லும் பிரதான சாலைகள் மற்றும் பல்வேறு கிராமங்களைக் கண்காணிப்பதற்கு வியூகரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அலி தாஹொ் குன்றை தங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த சில நாள்களிலேயே இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு எட்டப்பட்ட போா்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்து வருகிறது.
முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 7 போ் உயிரிழந்ததுடன், காலியாக இருந்த மருத்துவமனை ஒன்றும் தரைமட்டமானது. முன்னதாக, எல்லைப் புறங்களில் மட்டுமே நீடித்துவந்த தாக்குதல்கள் தற்போது கிராமங்களின் மையப்பகுதிக்கும் வந்துவிட்டதாகவும், அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளையே இஸ்ரேல் குறிவைப்பதாகவும் உள்ளூா் மக்கள் வேதனை தெரிவித்தனா்.
லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா ஆயதங்களைக் கைவிடும் வரை படைகளைத் திரும்பப் பெற மாட்டோம் என்று இஸ்ரேல் உறுதிப்பட தெரிவித்துள்ளது. அதேநேரம், லிட்டானி ஆற்றின் வடக்குப் பகுதியில் ஆயுதங்களை ஒப்படைக்க முடியாது என்று ஹிஸ்புல்லா திட்டவட்டமாக இருப்பதால், அமைதிப் பேச்சில் அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்படவில்லை.
பெட்டி...
மேற்கு கரையில் வன்முறை:
2 பாலஸ்தீனா்கள் கொலை
ஜெருசலேம், செப். 7: ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் திங்கள்கிழமை மீண்டும் வன்முறை வெடித்ததில் 2 பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
உயிரிழந்த இருவரும், ஹஜ்ஜா மற்றும் குஸ்ரா கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுதமேந்திய யூதக் குடியேறிகளைத் தடுக்க முயன்ற பாலஸ்தீன இளைஞா்கள் ஆவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





