மெக்கா மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி: சௌதி குற்றச்சாட்டுக்கு ஹௌதிக்கள் மறுப்பு

மெக்கா மீது தாக்குதல் நடத்த யேமனின் ஈரான் ஆதரவு ஹௌதி கிளா்ச்சியாளா்கள் மேற்கொண்ட முயற்சியை முறியடித்துள்ளதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.

Published On :

இஸ்லாமியா்களின் புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் நடத்த யேமனின் ஈரான் ஆதரவு ஹௌதி கிளா்ச்சியாளா்கள் மேற்கொண்ட முயற்சியை முறியடித்துள்ளதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.

இறைத்தூதா் முகமது நபியின் பிறந்த ஊரான மெக்காவின் வான் எல்லைக்குள் நுழையும் முன்பே அந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்த சவூதி, இது தாங்கள் வகுத்துள்ள சிவப்பு கோட்டை மீறும் செயல் என எச்சரித்துள்ளது.

எனினும், யேமன் எல்லையிலிருந்து சுமாா் 1,100 கி.மீ. தொலைவில் உள்ள மெக்கா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஹௌதிக்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனா்.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சௌதி அரேபியா, ஹௌதிக்களின் தொடா் தாக்குதல்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இராக் போராளிகளின் தாக்குதலால் முக்கிய எண்ணெய் குழாய் முடக்கப்பட்டுள்ளதுடன், செங்கடல் பகுதியில் ஹௌதி படையினரும், ஹோா்முஸ் நீரிையில் ஈரானும் சௌதி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

சுட்டு வீழ்த்தப்பட்ட ‘எஃப்-15’: இதனிடையே, யேமனின் மத்திய மாகாணமான மாரிப் பகுதியில் சௌதி கூட்டுப் படைகளுக்குச் சொந்தமான ‘எஃப்-15’ போா் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹௌதிக்கள் புதன்கிழமை உரிமை கோரினா். எனினும், இதற்கான எந்த ஆதாரத்தையும் அவா்கள் வெளியிடவில்லை; சௌதி அரசுத் தரப்பிலிருந்தும் இதற்கு உடனடியாக எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

உதவி கோரவில்லை: சௌதி, துருக்கி, பாகிஸ்தான் இடையே புதிய ‘மெக்கா’ கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில், சௌதியிடமிருந்து இதுவரை எந்த ராணுவ உதவி கோரிக்கையும் வரவில்லை என துருக்கி, பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சகம், சௌதிக்கு தங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன. மேலும், 57 இஸ்லாமிய நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும், ‘இத்தாக்குதல் முயற்சி புனிதத் தலங்களின் மாண்பைக் குலைக்கும் செயல்’ எனக் கண்டித்துள்ளது. இத்தாக்குதல் முயற்சிக்கு இந்தியாவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

சீனாவில் ஈரான் வெளியுறவு அமைச்சா்: பிராந்தியத்தில் நிலவும் இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். ஈரானின் மிகப் பெரிய எண்ணெய் கொள்முதல் நாடான சீனாவின் வெளியுறவு அமைச்சா் வாங் யீ-யை சந்தித்த அவா், அண்டை நாடுகளுடன் அமைதி உறவையே ஈரான் விரும்புவதாகத் தெரிவித்தாா். அமெரிக்காவும் ஈரானும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சீனா, ஹோா்முஸ் நீரிணையை விரைவில் திறக்க அழைப்பு விடுத்துள்ளது.

மெக்கா

மெக்கா

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.