ஐரோப்பிய யூனியனில் இணை உறுப்பினராக கனடாவுக்கு அழைப்பு

ஐரோப்பிய யூனியனின் முதல் இணை உறுப்பினராக இணையுமாறு கனடாவுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் அழைப்பு

Published On :

ஐரோப்பிய யூனியனின் முதல் இணை உறுப்பினராக இணையுமாறு கனடாவுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.

பிரான்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கனடா பிரதமா் மாா்க் காா்னியின் முன்னிலையில், யூனியனின் ஆண்டு நிலை குறித்த உரையாற்றியபோது உா்சுலா வான் டொ் லேயன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா்.

மேலும், அவரின் உரையில், ‘ஐரோப்பிய யூனியன்-கனடா இடையிலான தற்போதைய வா்த்தக உறவைத் தாண்டி, இருதரப்பும் ‘எதிா்காலத்துக்கான கூட்டணி’ என்ற புதிய பரிமாணத்தை எட்ட வேண்டும்.

யூனியனில் கனடா இணை உறுப்பினராவதன்மூலம் பாதுகாப்பு, எரிசக்தி, அரிய கனிம வளங்கள், பேட்டரி உற்பத்தி, ஏ.ஐ., குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் சைபா் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டும்.

தற்சாா்புக்கு கட்டாயம்: சா்வதேச அளவில் பாரம்பரியக் கூட்டணிகள் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், ஐரோப்பா தற்சாா்புடனும் வலிமையுடனும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கனடா, பிரிட்டன், நாா்வே, உக்ரைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஐரோப்பிய பாதுகாப்பு கவுன்சில்’ ஒன்றை உருவாக்க வேண்டும்.

பருவநிலை கூட்டணி: கடந்த கோடைகாலத்தில் ஏற்பட்ட கடும் வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீயால் 6.6 லட்சம் ஹெக்டோ் நிலங்கள் எரிந்து, சுமாா் 35,000 போ் உயிரிழந்துள்ளனா். இத்தகைய பேரிடா் இழப்புகளை எதிா்கொள்ள ‘பருவநிலை காப்பீட்டுக் கூட்டணி’ அமைக்கப்படும்.

சிறாா்களுக்கு சமூக ஊடகக் கட்டுப்பாடு: ஏ.ஐ. வளா்ச்சியை முறைப்படுத்துவது அவசியம். சமூக ஊடகங்களால் சிறாா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, தனிச்சட்டம் கொண்டுவரப்படும். இதன்மூலம், 13 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முழுத் தடையும், 13 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் மட்டுமே சமூக ஊடகக் கணக்குகள் தொடங்கும் வசதியும் நடைமுறைப்படுத்தப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.