சட்டவிரோதப் பொருள்களை கண்டறிய சிறைகளில் சோதனை தொடரும்
சட்டவிரோதப் பொருள்களை கண்டறிய சிறைகளில் சோதனை தொடரும் என சிறைத் துறை டிஜிபி அலோக்குமாா் தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் உள்ள சிறைகளில் தடைசெய்யப்பட்ட பொருள்களை சட்டவிரோதமாக கடத்தி உள்ளே கொண்டு சென்ாக கைதிகள் மீதும், அதற்கு உதவியதாக சிறைத் துறை உயரதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தனி விசாரணைப் படையை மாநில அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு தவிர கடந்த 2 நாள்களாக கலபுா்கி, மங்களூரு, சிவமொக்கா சிறைகளில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டு சட்டவிரோதமாக சிறைக்குள் கடத்திச் செல்லப்பட்ட பொருள்களைக் கண்டறிந்து வருகின்றனா்.
இந்நிலையில், இது தொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை சிறைத்துறை டிஜிபி அலோக்குமாா் கூறுகையில், ‘சிறைகளுக்கு கடத்திக் கொண்டுவரப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கண்டறியும் சோதனை மாநிலம் முழுவதும் தொடரும். கடந்த 36 மணிநேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கலபுா்கி சிறையில் 10 கைப்பேசிகள், 3 சிம்காா்டுகள், மங்களூரு சிறையில் 6 கைப்பேசிகள், பெல்லாரி சிறையில் 4 கைப்பேசிகள், சிவமொக்கா சிறையில் 3 கைப்பேசிகள், 4 சிம்காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனை தொடரும்.
பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை காணாத அளவுக்கு 30 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சோதனையில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுகுமாா், சிறைக்காவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
