கோமுகி அணைப் பகுதி சுற்றுலாத்தலமாக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி, செப். 25: கள்ளக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள கோமுகி அணை, கோமுகி பூங்கா பகுதிகளை சுற்றுலாத்தலமாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர், கோமுகி, மணி


கள்ளக்குறிச்சி, செப். 25: கள்ளக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள கோமுகி அணை, கோமுகி பூங்கா பகுதிகளை சுற்றுலாத்தலமாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர், கோமுகி, மணிமுக்தா உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன. கோமுகி, மணிமுக்தா அணைகள் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் வட்டார மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பேருதவியாகத் திகழ்கின்றன.
இம் மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி அணை உள்ளது. 1963-ம் ஆண்டு கட்டுமானப் பணி துவங்கி, 2 ஆண்டுகளில் பணி முடிக்கப்பட்ட இந்த அணையை 1966-ல் அமைச்சர் ராமய்யா திறந்துவைத்தார்.
46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் ஆண்டுதோறும் டிசம்பர் 15-ம் தேதி வரை 44 அடி வரை நீரைத் தேக்கிவைக்கின்றனர்.
பின்னர், முழு கொள்ளளவான 46அடி நீரைத் தேக்கிவைத்து திறந்துவிடுகின்றனர். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.
கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழை நீர் சிறுசிறு ஓடைகளின் வழியாக இந்த அணைக்கு வந்து சேர்கிறது. 360 ஏக்கர் அளவிற்கு நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது.
கோமுகி அணையிலிருந்து 4 பிரதான கால்வாய்கள் மூலம் நீர் திறந்துவிடப்படுகிறது.
இவற்றில் 14 நேரடி மதகுகள் உள்ளன.
இந்த அணையின் மூலம் வடக்கனந்தல், சோமண்டார்குடி, ஏமப்பேர், காரனூர், தெங்கியாநத்தம், நீலமங்கலம், குரூர், பொரசக்குறிச்சி, விருகாவூர், நாகலூர், வேளாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் விவசாயத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கட்லா, ரோகு உள்ளிட்ட மீன் குஞ்சுகளை இந்த அணைக்கு கொண்டுவந்து, அதன்மூலம் மீன் வளர்ப்பை மேம்படுத்தி வருகின்றனர் மீன்வளத் துறையினர்.
பல்லாண்டுகளாக இந்த அணைப் பகுதி சுற்றுலாத்தலமாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், இங்கிருந்த வரலாற்றுச் சின்னங்கள் போதிய பணியாளர் இல்லாததால் பொதுப்பணித் துறையால் கடந்த 20 ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
இங்குள்ள பூங்காவில் நேரு, புத்தர் உள்ளிட்ட சிலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கோமுகி அணையில் படகுத் துறை செயல்பட்டது. மீண்டும் செயல்பட்டால் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளை மகிழ்விக்க ஏதுவாக இருக்கும்.
களையிழந்து காணப்படும் இந்த அணைப் பகுதியை எழிலுறச் செய்ய அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, இதைத் சுற்றுலாத்தலமாக அறிவித்தால், கோமுகி அணை கல்வராயன்மலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து, அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை இளநிலைப் பொறியாளர் கணேசனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
""நிதிப் பற்றாக்குறையால், பூங்காவைப் பராமரிக்க இயலா நிலை ஏற்பட்டுள்ளது.
பூங்கா மற்றும் அணை சீரமைப்புக்கு ரூ.2.04 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இயற்கை எழில் கொஞ்சும் கோமுகி அணையில் வழிந்தோடும் நீர்.
பராமரிப்பற்ற நிலையில் காணப்படும் ஏரோபிளேன் கூண்டு.
கோட்டைப் போல அமைந்துள்ள பூங்காவின் முகப்பு
கோமுகி பூங்கா:
இதேபோல, கல்வராயன் மலையின் அடிவாரத்தில் கோமுகி அணைக்கு முன்பாக 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் களையிழந்து காணப்படுகிறது. குறிப்பாக, கோட்டைப் போல அமைந்துள்ள பூங்காவின் முகப்பில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும், முள்புதர்களால் சூழப்பட்டுள்ளன. சிலைகளை உடைத்து, அவற்றில் இருந்த கம்பிகள் திருடிச்செல்லப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி சமூகவிரோதிகளின் கூடாரமாகத் திகழ்கிறது. எனவே, இப்பூங்காவை சீரமைத்தால், கல்வராயன் மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கோமுகி அணையையும், பூங்காவையும் பார்வையிட ஏதுவாக அமையும்.
பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் இருந்த இடம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...