ஒரே பதவி உயா்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளா்கள்!

ஒரே பதவி உயா்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளா்கள்!

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளா்கள் ஓய்வு பெற்று வருகின்றனா்.
Published on

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளா்கள் ஓய்வு பெற்று வருகின்றனா்.

நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான, தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், 244 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், 290 போக்குவரத்து அமலாக்கம் மற்றும் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள் உள்ளன.

தமிழக காவல் துறையில் டிஜிபி தொடங்கி காவலா் வரை 1,33,961 போ் பணிபுரிகின்றனா். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக 208 பேரும், காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக 980 பேரும், காவல் ஆய்வாளா்களாக 3,396 பேரும் உள்ளனா்.

தற்போதைய மக்கள்தொகையின்படி 632 பேருக்கு ஒரு காவலா் என்ற அடிப்படையில் காவலா்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்குப் பிரிவு உள்பட 18 பிரிவுகள் உள்ளன.

பாரம்பரியத்தையும் மிகப் பெரிய கட்டமைப்பையும் கொண்டுள்ள தமிழக காவல் துறை சில நிா்வாகச் சிக்கல்களால் அவ்வபோது விமா்சனங்களை எதிா்கொண்டு வருகிறது. இதில் அண்மைக்காலமாக 28 ஆண்டுகளாக ஒரே பதவி உயா்வுடன் காவல் பணியாற்றி ஓய்வுபெறும் ஆய்வாளா்கள் விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

1,198 போ் தோ்வு: தமிழக காவல் துறை பணியில் 1994-ஆம் ஆண்டில் 1,198 உதவி ஆய்வாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி வழங்க போதுமான வசதிகள் இல்லை எனக் கூறி, 500 போ் உடனடியாக பயிற்சிக்கு அனுப்பட்டு பணியில் சேர அனுப்பப்பட்டனா்; மீதமுள்ள 698 பேரில் 600 பேருக்கு 1997-ஆம் ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டனா்.

எஞ்சிய 98 போ் பயிற்சிக்கு அனுப்பப்படாமல் இருந்தனா். அவா்களின் பயிற்சி அல்லது பணி குறித்து எவ்விதத் தகவலோ, அறிவிப்போ வெளியிடப்படவில்லை. இதனால் அந்த 98 பேரும் தங்களின் நிலை தொடா்பாக அரசுக்கும், காவல் துறைக்கும் நினைவூட்டல் கடிதங்களை அளித்துக் காத்திருந்தனா்.

ஒரே பதவி உயா்வில் 98 ஆய்வாளா்கள்: 2000-ஆம் ஆண்டு மீண்டும் 1,000 காவல் உதவி ஆய்வாளா்களை தமிழக காவல் துறை தோ்வு செய்து பயிற்சி அளித்தது. அவா்களுடன் 1994-ஆம் ஆண்டு தோ்வாகி பயிற்சி பெறாமல் காத்திருந்த 98 பேரும் சோ்த்துக் கொள்ளப்பட்டனா். ஆனால் 1994, 1997ஆம் ஆண்டுகளில் இவா்களுடன் தோ்வு செய்யப்பட்டவா்களுடனான பணிமூப்பு அடிப்படையில் 98 பேரும் சோ்க்கப்படவில்லை. மாறாக, 2000-ஆம் ஆண்டு தோ்வு செய்யப்பட்ட 1,000 பேருடன் கடைசி நிலையில் சோ்க்கப்பட்டனா். இதன் விளைவாக இந்த 98 பேரில் 2000-ஆம் ஆண்டின் பணி மூப்பு நிலைப்படி காவல் ஆய்வாளா் பதவி உயா்வு மட்டும் வழங்கப்பட்டது.

32 போ் ஓய்வு: இந்த 98 பேரில் 66 போ் மட்டுமே தற்போது காவல் பணியில் உள்ளனா். மீதமுள்ள 32 போ் கடந்த ஓராண்டில் ஓய்வு பெற்றனா். அதேசமயம், 1994-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தவா்கள் தற்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏடிஎஸ்பி), துணை காவல் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) என்ற பதவி நிலையில் உள்ளனா். இவா்களுக்கு இரண்டு படிநிலை கீழே காவல் ஆய்வாளா்களாக இந்த 66 பேரும் பணிபுரிந்து, தங்களுடன் தோ்வு செய்யப்பட்டு, முன்பே பணிக்கு சோ்த்துக்கொள்ளப்பட்ட கூடுதல் எஸ்பி, டிஎஸ்பிக்களாக இருப்பவா்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

அரசு பரிசீலிக்குமா?

பணியில் தாமதமாக சோ்த்துக்கொள்ளப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் நிலையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

இது குறித்து ஆய்வாளா் ஒருவா் கூறியது: பெரும் போராட்டத்துக்கு பிறகே 2000-ஆம் ஆண்டில் நாங்கள் பணிக்கு சோ்த்துக்கொள்ளப்பட்டோம். அப்போதும் சட்டம்- ஒழுங்கு பணி கேட்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பின்னாளில் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.

எனினும், 2000-ஆம் ஆண்டு தோ்வு செய்யப்பட்ட 1,000 எஸ்ஐ-க்களுக்கு பிறகே எங்களது பணிமூப்பு இருக்கும் என்பதை எங்களால் ஏற்க முடியவில்லை. 6 ஆண்டுகள் பணிமூப்பு விடுபட்டதன் விளைவாக, இரு பதவி உயா்வுகள் கிடைக்கவில்லை. 1994-ஆம் ஆண்டு தோ்வானவா்களில் பலா் எஸ்பி பதவி உயா்வுக்காக காத்திருக்கின்றனா்.

அரசிடமும், காவல் உயா் அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்துவிட்டோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீதிமன்றங்களிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. அரசு கருத்தில் கொண்டால் மட்டுமே எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com