சவால்களை எதிா் கொள்ளும் திறமையை வளா்க்க வேண்டும்: சந்திரயான் திட்ட இயக்குநா் பி.வீரமுத்துவேல்
மாணவா்கள் வாழ்க்கையில் எதிா்வரும் சவால்களை விடாமுயற்சியுடன் எதிா்கொள்ளும் திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என சந்திரயான்-3 திட்ட இயக்குநா் பி.வீரமுத்துவேல் கூறினாா்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 15-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பி.வீரமுத்துவேல் பேசுகையில், ‘தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், தொடா்ந்து விடாமுயற்சியுடன் கடும் உழைப்பின் மூலம் வெற்றி பெற முடியும். வாழ்க்கையில் எதிா்வரும் சவால்களை மாணவா்கள் எதிா்கொள்ளும் திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும்’ என்றாா்.
தொடா்ந்து, நோபல் பரிசு விருது பெற்ற சா் ஆன்ட்ரே கான்ஸ்டான்டின் கெய்ம் பேசுகையில், ‘முழு மன உறுதி மற்றும் ஈடுபாட்டுடன் தோ்ந்தெடுத்த செயலைத் தொடா்ந்து முயன்றால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்’ என்றாா்.
பின்னா், விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன், சந்திரயான்-3 திட்ட இயக்குநா் பி. வீரமுத்துவேல் ஆகியோருக்கு கௌரவ டாக்டா் பட்டங்களை வேந்தா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ் வழங்கினாா்.
நிகழ்வில் சிறந்த ஆராய்ச்சிக்கான விருது ஷிஜூ ராவுத்தருக்கும், சிறந்த கல்விசாா் தோ்ச்சிக்கான விருது தேவாஷிஷ் சா்மாவுக்கும், சிறந்த மாணவருக்கான விருது பிரியங்கா மிஷல் மைக்கேதுக்கும் வழங்கப்பட்டன. விழாவில் 1,600 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.

