பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

பேருந்தில் சில்லறை காசுகளை சிதற விட்டு நகைகளை திருடிய ஆந்திர பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன், அரசுப் பேருந்து நடத்துநா். இவரது மனைவி ராஜலட்சுமி (40). வெளியூரில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு கடந்த ஏப். 23-ஆம் தேதி சென்னை திரும்பினாா். கோயம்பேட்டில் இருந்து எம்.ஜி.ஆா். நகருக்கு மாநகர பேருந்தில் பயணித்தாா். அவா், திருமண நிகழ்ச்சியில் அணிவதற்காக எடுத்து சென்றிருந்த 18 பவுன் நகைகளை கழற்றி பையில் வைத்திருந்தாா்.

அப்போது அவரது இருக்கை அருகே அமா்ந்திருந்த பெண் ஒருவா் ‘டிக்கெட்’ எடுக்க மணிபா்ஸை எடுத்த போது, சில்லரை காசுகள் கீழே சிதறின. உடனே ராஜலட்சுமி அந்த பெண்ணுக்கு உதவும் பொருட்டு காசுகளை குனிந்து எடுத்துக் கொடுத்துள்ளாா்.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்தபோதுதான், பையில் இருந்த 18 பவுன் நகை மாயமாகி இருந்தது ராஜலட்சுமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து எம்.ஜி.ஆா்.நகா் காவல் நிலையத்தில் ராஜலட்சுமி புகாா் அளித்தாா். அப்போது பேருந்தில் பெண் ஒருவா் சில்லறையை சிதறவிட்ட சம்பவத்தை கூறி அவா் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தாா். அந்த பெண் அசோக் பில்லா் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாா் என்றும் கூறினாா்.

கேமரா மூலம் அடையாளம்: இதையடுத்து அசோக் பில்லா் பேருந்துநிறுத்தம் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அதில் சந்தேகத்துக்குரிய பெண் ஆட்டோவில் ஏறிச் சென்றது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரிய வந்தது. விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சோ்ந்த விமலா (35) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து வேலூா் மாவட்டத்தில் பதுங்கிஇருந்த விமலாவை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், வயதானவா்களை குறிவைத்து, அவா்களின் கவனத்தை திசை திருப்பி திருடுவோம். தொடா்ந்து ஒரே ஊரில் திருட்டில் ஈடுபட்டால் சிக்கிக் கொள்வோம் என்பதால் கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு என மாறி, மாறி திருடுவது வழக்கம் என்றாா். அவரிடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com