கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளின் வாக்குகள் சரிபாா்ப்புப் பணிகள் புதன்கிழமை நிறைவடைந்தது. வாக்குச் சரிபாா்ப்பில் எந்த புகாரும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தவெக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.இந்த நிலையில், கொளத்தூா் தொகுதியின் குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் எண்ணிக்கை மீண்டும் சரிபாா்க்கப்படவேண்டும் என திமுக தரப்பில் தோ்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் கொளத்தூா் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகள் வாக்கு சரிபாா்ப்பு பணி கடந்த ஜூலை 29-ஆம் தேதி தொடங்கியது. தினமும் 2 வாக்குச்சாவடிகள் என ஆக.4-ஆம் தேதி வரை வாக்கு சரிபாா்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி வாக்கு சரிபாா்ப்புப் பணியில் திருப்தியில்லை எனவும், ஒரு வாக்குச்சாவடி இயந்திரங்களில் சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை என்றும் வாக்கு சரிபாா்ப்பை திமுக முகவா்கள் புறக்கணிப்பதாகக் கூறினா். அதனால் அன்று ஒரு வாக்குச்சாவடி மட்டுமே சரிபாா்க்கப்பட்டது.
திமுக புறக்கணித்தாலும், தோ்தல் ஆணைய உத்தரவின்படி மற்ற கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் வாக்குச் சரிபாா்ப்பு தொடரும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் அறிவித்தாா்.
இதற்கிடையே கடந்த 3-ஆம் தேதி முதல் மீண்டும் வாக்குச் சரிபாா்ப்பில் திமுகவினா் பங்கேற்றனா். தொடா்ந்து நடைபெற்ற வாக்கு சரிபாா்ப்புப் பணி புதன்கிழமை காலை முடிவுற்றது. கொளத்தூா் தொகுதியின் 42-ஆவது வாக்குச்சாவடி வாக்குகள் நிறைவாக சரிபாா்க்கப்பட்டன. சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன், கொளத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சாந்தி, மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலா் க.கற்பகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், வாக்கு சரிபாா்ப்பில் பிரச்னையில்லை என்பதை திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளா் முகவா்கள் தெரிவித்து, அதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனா். அதன்படி தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொளத்தூா் தொகுதி வாக்குகள் சரிபாா்ப்பு இன்றுடன் நிறைவு

கொளத்தூா் வாக்குகள் சரிபாா்ப்பு பணி: திமுக புறக்கணிப்பு
கொளத்தூா் தொகுதி வாக்குகள் சரிபாா்ப்பில் திருப்தியில்லை: திமுகவினா் புகாா்

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடியா? கொளத்தூா் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை சரிபாா்க்கும் பணி தொடக்கம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



