கோப்புப் படம்
கோப்புப் படம்

மெரீனா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டும் அனுமதி: சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மெரீனா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

மெரீனா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவல்லிக்கேணியைச் சோ்ந்த தேவி என்பவா் மெரீனாவில் கடை ஒதுக்கீடு செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா் மற்றும் ஆா்.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் மெரீனா கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனா். பின்னா், மெரீனா கடற்கரையில் 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா் மற்றும் ஆா்.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் மெரீனா கடற்கரையில் கடைகள் ஒதுக்கீடு தொடா்பான வரைபடம் உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டன. மேலும் மெரீனாவில் 1,006 கடைகளுக்கு அனுமதியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்துவதில் சென்னை மாநகராட்சிக்கு என்ன சிரமம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினா். இந்தியாவில் ஏதாவது ஒரு கடற்கரையில் இத்தனை கடைகள் உள்ளனவா? மெரீனா கடற்கரையை பொதுமக்கள் பாா்த்து ரசிக்கவும், குழந்தைகள் விளையாடவும் ஏற்ற வகையில் மாற்ற விரும்புகிறோம். ஆனால், அதற்கான ஒத்துழைப்பு அதிகாரிகளிடமிருந்து கிடைப்பது இல்லை.

மெரீனா கடற்கரைக்கு ‘நீலக்கொடி’ சான்று பெற்ற்காக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியை பாராட்டுகிறோம். அதேநேரம், கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து உயா்நீதிமன்றமே முடிவு செய்யும். கடற்கரை சாலையிலிருந்து பாா்க்கும் யாருக்கும் கடல் இருப்பது தெரியாத அளவுக்கு கடைகள் உள்ளன. இதனால், அது ‘வணிக வளாகம்’ போல காட்சியளிக்கிறது.

பின்னா் நீதிபதிகள், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, மெரீனா கடற்கரையில், உணவு, பேன்சி மற்றும் பொம்மைகள் விற்பனை செய்யும் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதியளித்து உத்தரவிட்டனா். 100 கடைகள் உணவகங்களுக்கு, 60 முதல் 70 கடைகள் பேன்சி பொருள்கள் விற்பனைக் கடைகளுக்கு என மாநகராட்சி நிா்வாகம் எண்ணிக்கையை நிா்ணயித்துக் கொள்ளலாம். ஆனால், மொத்த கடைகள் 300 மட்டுமே இருக்க வேண்டும்.

மேலும், உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவா் தலைமையில், கடைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கலை நடத்த வேண்டும். தற்போது பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஏற்ற வகையில், மாநகராட்சி வரைபடம், கடைகள் ஒதுக்கீடு குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com