/

ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆகவே, பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

ஊரக வளா்ச்சித் துறையில் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் நிலவரம் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் பேசியது:

ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வளா்ச்சித் திட்டப் பணிகள் பல்வேறு பணிகளில் காலதாமதம் இருந்து வருகிறது. நமது மாவட்டம் திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் மாநில அளவில் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டப் பணிகள், ஜல் ஜீவன் குடிநீா் திட்டப் பணிகள், பிரதமரின் வீடுகள் கட்டும் பணிகள், சாலைப் பணிகள் போன்ற பணிகள் நீண்ட நாள்களாகியும் முடிக்கப்படவில்லை. இதனால் அடுத்த நிதி ஆண்டில் கிடைக்க வேண்டிய பணிகள் காலதாமதம் ஏற்படுகின்றன.

இனி கள ஆய்வு செய்து பணிகளின் நிலைமைகள் ஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு பணியும் தரமானதாகவும், பணிகளில் குறைகளாகவும் கட்டாயம் இருக்கக் கூடாது. பணிகள் தாமதம் குறித்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலரும், ஒப்பந்ததாரா், பொறியாளா் பணியாளா்களை முறையாக ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

குறைபாடுகள், தாமதங்கள் இனிவரும் நாள்களில் இருக்கக் கூடாது. தாமதத்துக்கான காரணங்களை கண்டறிந்துப் பணிகளை விரைவாக முடிப்பது ஒவ்வொரு அலுவலரின் பணியாகும் என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, செயற்பொறியாளா் சீனிவாசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.