மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள்: அமைச்சா் ஆா்.காந்தி

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள்: அமைச்சா் ஆா்.காந்தி

மகளிருக்கு முக்கியம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
Published on

மகளிருக்கு முக்கியம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாம் மேல்விஷாரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா்.

விழாவில் அமைச்சா் ஆா் காந்தி கலந்து கொண்டு 1,937 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 24 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டிலான பட்டாக்களுக்கான உத்தரவு அணைகளை வழங்கிப் பேசியதாவது:

அனைத்து துறைகளிலும் மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டதுடன், மக்களுடன் முதல்வா் எனும் சிறப்புத் திட்ட முகாமைத் தொடங்கி வைத்து பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் அரசுத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கல்விக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம், நம்மை காக்கும் 48, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் சிரமத்தைப் போக்கும் வகையில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, மகளிா்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசுப் பள்ளியில் பயின்று உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்றாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியா் மனோண்மணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் முஹமது அமீன், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் காந்திமதி பாண்டுரங்கன், நகா்மன்றத் துணைத் தலைவா்கள் ல்ஜாா் அஹமத், ரமேஷ்கா்ணா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com