ஆற்காட்டில்  உழவா் ஆலோசனை மையக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

ஆற்காட்டில் உழவா் ஆலோசனை மையக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

ஆற்காடு வேளாண்மை விற்பனை கூடத்தில் ரூ. 84 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு உழவா் ஆலோசனை மையக் கட்டடத்தை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை திறந்து வைத்தாா். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை இயக்குநா் சீனிராஜ் (வேளாண்மை விற்பனை) வரவேற்றாா். கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு, புதிய கட்டடத்தை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். இந்த மையம் விவசாயிகளுக்கான வேளாண் விளை பொருள்களின் சந்தை நிலவரம். விலை விவரங்கள், ஏற்றுமதி இதர வேளாண் வாய்ப்புகள் மற்றும் பொருள்களுக்கான விற்பனை வாய்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். இந்த மையம் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் செய்பவா்களுக்கும், வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கும் பல்வேறு பயனுள்ள தகவல்களை அளிக்க கூடிய மையமாக செயல்படும். நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அதேபோல், வாலாஜாபேட்டை நகராட்சியில் வன்னிவேடு தலைமை நீரேற்று நிலையத்தில், ரூ. 10.84 கோடி மதிப்பீட்டில் குடிநீா் மேம்பாட்டு பணிக்கு அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா். வன்னிவேடு ஊராட்சி ரபீக் நகா் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடையை அவா் திறந்துவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com